என்னவள்

உறவுகளின் கூடுதல் காண வந்த
பெண்ணவ ளென்றும் என் தாயவள்
ஈன்றெடுக்காத கோமகள் புது மணமகள்
என வந்த அர்த்தநாரிக் குலமகள்!
2

அழுகை

உமிழ் நீர்த் தெரித்து
புது வுலகங் கண்ட
சின்னஞ் சிறு பிள்ளை
பிறப்பை உலகு ணர்த்த
தாமாய் கற்றுத் தெளிந்த
அழகிய முதற் கவிதை
கமலச் செவ்விதழ் விரித்து
ஒளித் தெரிக்கும் அழுகை
2

கனவு

விடியற் காலைப் பொழுது
கருவிழிப் பார்வைக் கதிர்கள்
ஊடுருவல் உரைந்த தருணம்
ஊரை விழுங்கிய பனிக்கோர்வை
குகைக்குள்ளே மறைந் திருந்த
தேவதையவள் வெளி யொளிர்ந்து
விரலால் மொழிப் பேசி
அருகிலே எனை யழைத்தாள்
தூரத்தில் அவள் இருக்க
எந்தன் தலை வருடல்
நான் உணர்ந் தெழுந்தேன்
வருடியதாய் உணர வில்லை
அன்பை யுணவாக்கி உண்டதாய்
கூறியது மனப் பசி
ஏனென்றால் வருடிய விரல்கள்
தாயின் ஐம் பரிவுகள்
3

அனிச்சம்

தொடு மலர்ச் செய்கையில்
தலைத் தொங்கும் அனிச்சத்தை
பசுமைப் படர்ந்த காட்டிற்குள்
இடர் படும் செடிதனை
பரைத்துத் தேடினள் கண்டதும்
ஐந்தண்டு கை யதனில்
பிடுங்கி நட்டாள் கூந்தலில்
வாடியது அனிச்ச மல்ல
பெருகிய தவள் நாணம்

தொடுஞ் செயலி லுருகும்
அனிச்ச மலர் போல
நாயகன் மூச்சுக் காற்றிலும்
உருகி வழியும் பெண்மை
2

உயிர்ச் சிற்பங்கள்

பதிக்கும் பாதத்தை
உள்ளிழுத்து உறவாடும்
சீர்மிகு மணலொடு
ஆர்பரிக்கும் கரையோரம்
தென்னந் தோலை
போர்த்தி யுடுத்தி
மூங்கில் கால்களை
துணையெனக் கொண்டு
அமர்ந்து நிற்கும்
குடில் கோபுர
சிறு கோவிலின்
உயிர்ச் சிற்பங்கள்
வெளி நின்று
நகைப்பது காண்

விதி

சில்லரைத் தேடி விழியிரண்டும்
வழிப்போக்கன் கை தன்னில்

சூரியக் கீற்று சுடர்விட்டும்
இருள் தோய்ந்த தென்ன
நின் முகம் அதனில்

பசிக் காலன் கயிறு கொண்டு
வயிற்றை சிறை பிடித்தான்
நின்னை நடுத் தெருவில்
விதியாலே ஆட்டி வைத்தான்
4

பூக்காரி

சிரிப்பைச் சேகரித்து
நூல் கயிற்றில்
சிறை பிடித்துச்
சில்லரை தேடும்
பெண் அவளின்
புன்னகைப் புதையலை
கண்டு சிறு
பூக்கள் யாவும்
ஆர்ப்பரிக்கும்
2

பந்தம்

என் விரலைத் துணை யேற்று
நடை பழகும் தத்தை யிடுட்டுத்
திமிரும் சிறு பிஞ்சுப் பாதங்கள்
சிறிது சிறிதாய் இடம் பெயரும்

நீ வளர துணை யானேன்
இது எனக்குப் பெருமை யடா
எந்தன் முதுகின் தண்டுத் தேய்ந்து
உடலொடு தலை கவிழும் காலத்தே
ஊன்றுத் தடி எனக்குத் தாராமல்
துணையாய் நீயெனக்கு வேண்டு மடா
2

இமைச் சிறகு

சிறகுகள் புதிதாய்
என்னுள் முளைத்து
காற்றை துளைத்து
தூறப் பறந்தாலும்
ஒன்றை மட்டும்
மறவாதென் மனது

கரு நிலவை
தாழிட்டு அடைகாக்கும்
இமைச் சிறகுகளின்
நீட்டல் முடிகளை
என் விரல்கள்
வருடுவதை மறப்பதில்லை

என் நிழலில் நான்

நரைத்த நாட்களின்
இளமைக் காலம்
தேடிப் பார்த்தேன்
கிடைக்கவில்லை

நரைக்கும் முன்
என் நிழலாய்
மாறிப் போனவனை
கனம் ஒன்றிலும்
நினைத்ததில்லை

மூன்று கால்
நாயகன் ஆகிவிட்டேன்
எந்தன் நிழலின்
துணைவனாகிவிட்டேன்
3

நட்பிலக்கணம்

வெண் சுவரின்றி
வாய் பிளக்கும்
சிறு நகையும்
மொழி அறியாது
நா தெரிக்கும்
குறை வரியும்
குழந்தையிடம்
அழகு தான்

துன்பம் துயரம்
இன்பம் இடுக்கண்
இவையாவும்
அர்த்தநாரிப் பெண்
உன்னுடன் பகிர்வதும்
அழகு தான்

பிறப்பால் மலரும்
உறவுகள் இடையில்
மறைந்து மிளிரும்
அன்பு உருமாறி
மருவிய நட்பும்
அழகு தான்

உணர்வால் பிறக்கும்
தோழமைத் தேடி
திகைக்கக் கிடைக்கும்
நட்பே உருகி
மருவிய நட்பும்
அழகு தான்
3

காதல்

இரவு உறக்கம் இமையை நெருங்கும்
உன் நினைவுகள் யாவும்
அதனை எதிர்த்து நிற்கும்
பனித் துளிகள் சேர்த்து வைத்த
குளிர் கூட்டு வெண்ணிலவு
மனது மட்டும் உறக்கங் கேட்கும்
நினைவுச் சண்டையில்
உறக்கமெனும் சடலம்
தனக்குத் தானே தீ வைக்கும்
இவ்வுணர்வை என்னவென்று சொல்வேன்
காதலா இல்லை உறக்கம் சாதலா?
2

என் மேகத் தோழி

ஒற்றைக் கண் பெண்ணவள்
திங்களுக்கிரு முறை அயற்வாள்...
அவளுறக்கம் கண்ட ஊறார்
அமாவாசை என்பர்!

உடல் நலின மேனிக்கு
வெண்ணிற புகையுடுத்தி
வலம் வருவாள்...

மண் வாடை மலர
நீர்த் தெளிப்பாள்
எந்தன் இரவுத் தோழி
கரு விண் மேகமே...