0

பால்வீதியில் ஒரு வீடு...


மின்மினி பூச்சிகளை,
வானில் சிதரடித்து,
நட்சத்திரங்கள் என்கிறாய்...

பிள்ளைகளின் புன்னகைகளை,
ஒவ்வொன்றாய் பரித்து,
வானில் படையலிட்டு,
சந்திரன் என்கிறாய்...

வேங்கை மரச்சாந்தை,
விரல் தூரிகையால்,
வண்ணமாய் பூசி,
மேகங்கள் என்கிறாய்...

இவை அனைத்தையும்,
கூண்டிற்குள் அடைத்துவிட்டு,
நீ வாழும்,
வீடு என்கிறாய்...

உனது வீட்டில்,
என் வரவை,
விடியலாய் காண்பாயோ?
0

இது எத்தனை புள்ளிக் கோலம்?


ஒவ்வொருவரும் வரையும் கோலங்களில்,
அவரது ஞாபகங்களை எல்லாம்,
ஆங்காங்கே புள்ளிகளாய் வைத்து...
அன்புடன் இன்பத்தையும் துன்பத்தையும்,
அவற்றுள் வண்ணங்களாய் இட்டால்...
தெரிவதெலாம் தாயின் முகமே!
0

எனக்காக எல்லாம் எனக்காக...


உன் கண்களின் சாரலில்,
நீ நனையும் பொழுதெலாம்,
என்னையும் நனைத்துவிடுகிறாய்!

அழகிய நிலவின்,
வெள்ளைப் பொழிவில்,
பால்சோறு உண்ணும் பொழுதெலாம்,
எனக்கும் ஊட்டுகிறாய்!

பொம்மைகளுடன் பொம்மையாய்,
நீ விளையாடும் பொழுதெலாம்,
என்னையும் அழைக்கிறாய்!

தொட்டிலுக்குள் அழகாய்,
நீ உறங்கும் பொழுதெலாம்,
தாலாட்டு கேட்கிறாய்!

இந்த அருமையான,
தருணங்களை எல்லாம்,
எனக்காகவே தருகிறாய்!
0

இராட்டினக்காரி


என்னைக் கண்டதும்,
தாவி குதித்து,
அனைத்துக் கொண்டு,
கன்னங்களை ஈரமாக்கி...
நீ பார்க்கும் பார்வையால்,
என் மனதிற்குள்,
ஆயிரம் இன்பங்களை,
அழகாய் சுழலடித்தாயடி,
அழகிய இராட்டினக்காரி!
0

வண்ணங்கள்


கால்களை நெஞ்சில் பதித்து,
புன்னகைகளை காற்றில் வீசி,
எச்சில் குழைத்த கைகளினால்,
என்னை வருடும் பொழுதெலாம்...
என் மனம்,
புன்னகைகளை மறைத்து...
வண்ணங்களை தெரிக்கிறது!
0

காதலன்


மழைக் காலங்களில்,
மழைக் காதலனாய்...
மழையை இரசிக்கவில்லை,
மழலையாய்...
உன்னை மட்டுமே,
இரசித்துக் கொண்டிருந்தேன்!
0

அந்நியன்


அலை என்னும் காதலி,
ஒவ்வொரு முறையும்,
கடற்கரைக் காதலனை...
முத்தமிட்டு தான் பிரிகிறது

நீ மட்டும் ஏனடி...
என்னை தொடாமலேயே,
அழகிய கண் சிமிட்டலுடன்,
என்னை...
அந்நியனாக்கிப் பிரிகிறாய்?