3

மனதிற்குள் மெதுவாக



பெண்ணே! போதும்... போதும்...
இதற்கு மேலும் சிந்தாதே...

வாடையற்ற நின் புன்னகைகளை,
தினம் தினம் சேமித்தே,
எந்தன் ஆயுள் கழிந்துவிடும்...
மிளிர்தலில் கண்களும் மங்கிவிடும்...

வேண்டுமென்றால், இப்படிச் செய்,
உந்தன் மனதிற்குள் மெதுவாக,
வெகு நேரம் சிரித்துக்கொள்,
அங்கு வந்து கேட்டுக்கொள்கிறேன்!
11

காத்திருக்கிறேன்...



கொஞ்சி கொஞ்சி
என்னிடம் பேசுவாய்...

மிருதுவாய் வருடி
கன்னத்தை கிள்ளுவாய்...

தோள் சாய்ந்து
எண்ணங்கள் பகிர்வாய்...

என்னில் சாய்ந்து
வெட்கமும் உதிர்ப்பாய்...

விரல்களின் மீது
முத்தமும் இடுவாய்...

நின் வார்த்தைகளால்
அன்பும் பொழிவாய்...

இப்படி எல்லாம்
சின்ன சின்னதாய்
குறும்புகள் செய்வாய்!

இவை அனைத்தையும்
நான் இரசிக்க
வெகு நேரம்
உனக்காக காத்திருக்கிறேன்!
7

என்றென்றும் வேண்டுமடி



வாய் திறவாது வெட்கத்துடன்,
நாணி பிறக்கும் நகையும்...
இயற்கையின் வாடை பிடுங்கி,
மேனி நிறைத்த மணமும்...
பாதச் சுவடுகள், மணல் அலந்து,
தூரம் சென்று, பார்க்கும் பார்வையும்...
துன்பம் தலை தூக்கும் காலத்தில்,
ஆறுதல் தரும், நின் வார்த்தைகளும்...
நின் மடியில் நானிருக்க,
தலை கோதும் விரல்களும்...
என்றென்றும் வேண்டுமடி!
தாயாய் தாலாட்ட...
சேயாய் விளையாட...
தோழியாய் மனம் பகிர...
என்றென்றும் வேண்டுமடி
நீ எனக்கு...