அதிர்வு மொழி...


அன்போடு உதிர்க்கும்,
வார்த்தைகள் மட்டுமே,
காற்றை களைக்கும்,
அதிர்வு மொழியை,
முழுவதுமாய் கற்றிருக்கிறது!

மற்றவர்கள் உதிர்க்கும்,
அன்பில்லா வார்த்தைகள்,
காற்றில் கரைந்து,
ஒலி இழப்பதால்...
நீ இல்லாத,
ஒவ்வொரு நொடியும்,
மெளனம் மட்டுமே,
என்னை சூழ்கிறது!

பாசம் அறியாதவன்...


கோவிலுக்குச் செல்லும்,
ஒவ்வொரு முறையும்,
எனக்காக வேண்டுவதால்...
மூலவருக்கு கோபம்!
"நீ எத்தனை முறைதான்
வேண்டுவாய்?" என்று...

பாவம்...
படைத்தவன்,
ஈன்றவளின் பாசம் அறியவில்லை!
0

செல்லக் குறும்புகள்!


கன்னத்தை கிள்ளி,
கொட்டு வைத்து,
வசைப் பாடாமல்...
அழகாய் சிந்தும்,
உன்னுடைய சிரிப்புகளுக்காக...
தினமும் தொடர்கிறது,
என்னுடைய,
செல்லக் குறும்புகள்!
3

உறக்கமும் அழகு... அழகு...


இதமான தென்றலும்,
நறுமண வாடையும்,
கலந்த காற்றால் வரும்,
உறக்கத்தை காட்டிலும்...
தலை வருடி,
தட்டிக் கொடுத்து,
தாலாட்டு கேட்டு வரும்,
உறக்கம்...
எவ்வளவு அழகு!
2

எனக்கும் ஆனந்தமே!!!


வாங்கி வந்த இனிப்பை,
ஒரு கடி கடித்தவிட்டு,
மீதத்தை தரும் பொழுது...
உந்தன் முகத்தில் பொழியும்,
அமிழ்தை உண்ட ஆனந்தத்தை,
காணும் பொழுது,
எனக்கும் ஆனந்தமே!!!
2

இன்பத்திலும் பேரின்பம்!


பண்பட்ட நிலத்தை,
பயனுற விதைத்து,
நெடுக வளர்ந்து,
எட்டிப் பார்க்கும்,
நெல்மணிகளைக் காணுதல்,
விதைத்தவனுக்கு இன்பம்!

அதைப் போன்றே...
பண்பட்டு வளர்ந்த,
பிள்ளையை காண்பது,
ஈன்றவளுக்கு...
இன்பத்திலும் பேரின்பம்!
4

விண்ணப்பங்கள்!


உன்னருகே இல்லாமல்,
பயில்வதில் மூழ்கிய,
கல்லூரி நாட்களையும்...
வேலை தேடியே,
அலைந்த நாட்களையும்...
மீட்டுத்தர வேண்டியே,
ஒவ்வொரு கடவுளுக்கு...
ஆயிரம் விண்ணப்பங்கள்!
4

பயணம்


எந்தன் உறக்கத்தில்,
கனவுகள் இல்லை!
எந்தன் மனதில்,
குழப்பங்கள் இல்லை!
எந்தன் கண்களில்,
நீரும் இல்லை!
எந்தன் நினைவில்,
நீயும் இல்லை!
ஆனால்...
பிரிவின் வலி மட்டும்,
எங்கிருந்தோ வாட்டுகிறது.
ஆகவே...
உந்தன் மடி உறங்க,
கல்லூரி விடுமுறையை நோக்கியே,
இனி நாட்களின் பயணம்...