கடற்கரை மணலிலும், காய்ந்த மரத்திலும், தேர்வு காகிதத்திலும், பச்சை இலைகளிலும், ஓடும் நீரிலும், வெந்நிற சுவற்றிலும், உலவும் காற்றிலும், உந்தன் மனதிலும், சின்னஞ்சிறு ஓவியங்களாய்... நீ பதித்த எனது பெயர்கள்...
வாய் திறவாது வெட்கத்துடன், நாணி பிறக்கும் நகையும்... இயற்கையின் வாடை பிடுங்கி, மேனி நிறைத்த மணமும்... பாதச் சுவடுகள், மணல் அலந்து, தூரம் சென்று, பார்க்கும் பார்வையும்... துன்பம் தலை தூக்கும் காலத்தில், ஆறுதல் தரும், நின் வார்த்தைகளும்... நின் மடியில் நானிருக்க, தலை கோதும் விரல்களும்... என்றென்றும் வேண்டுமடி! தாயாய் தாலாட்ட... சேயாய் விளையாட... தோழியாய் மனம் பகிர... என்றென்றும் வேண்டுமடி நீ எனக்கு...
உறங்காமல் கண் விழித்த நாட்கள், அயர்ந்து சுவரோடு சாய்ந்த நாட்கள், புத்தகத்தில் முகம் தொலைத்த நாட்கள், எழுது கோள்களுடன் பேசிய நாட்கள், நட்பு சகாக்களுடன் நகையாடிய நாட்கள், தாய் மடி தேடிய நாட்கள்,
இவ்வாறு...
கடந்த நாட்களைத் திரும்பிப் பார்த்திடினும், எண்ண ஏட்டுக்களை புரட்டிப் பார்த்திடினும், என்று வரும் இந்த சுகம்? மீண்டும் பள்ளிக்கு போகலாம்...
விரல் எட்டிப் பார்க்கும், நகக் கண்களை வெட்டி, மண்ணிற்கு தானம் வார்த்து, வீணடித்தது போதும் பெண்ணே...
இம்முறை அவற்றை எல்லாம், தானமாய் என்னிடம் கொடுத்துவிடு. வெண்ணிலவு இல்லா நாளன்று, கார் வண்ண மேகத்தில், பொங்கும் வெள்ளிப் புன்னகைகளாய்! வெள்ளிப் பிறை நிலவாய்! நின் நகங்களை யாவும், அனுப்பி வைக்க எண்ணுகிறேன்.