4

எத்தனை அழகு?



சன்னதியில் பெற்ற,
குங்குமத்தை கையில் ஏந்தி,
நெற்றியில் இட்டு,
கோவிலைச் சுற்றி வந்து,
கடவுளை காணும்...
செய்கை அழகு!

கோவிலைச் சுற்றி,
நடக்கும் போது...
உந்தன் பாதம் சுற்றி,
நடனமாடி சிரிக்கும்,
சரிகை வேய்ந்த,
புடவையும் அழகு!

மெளனத்தாலும்,
கண்களாலும்,
மனதாலும்,
உந்தன் புன்முறுவலாலும்,
கடவுளிடம் பேசும்...
பாவனையும் அழகு!
3

காதல் கடிதம்


உன்னோடு பேசினேன்,
உன்னோடு பழகினேன்,
என்னோடு
உன்னை வைத்து,
ஓயாமல் பார்த்தேன்...
நேற்று வரை,
எந்தன் மனதோடும்,
உந்தன் நிழற்படத்தோடும்...

உன்னோடு பேச வேண்டும்,
உன்னோடு பழக வேண்டும்,
என் அருகில் உனை வைத்து,
பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்...
இன்று முதல்,
என்றென்றும் உன்னோடும்,
உந்தன் மனதோடும்...

இவ்வாறு எண்ணியே
பல இன்று நேற்றாக மாறி
காற்றோடு கவிதையாய்
மறைந்தே போனதே...

ஆனால்...
இந்த இன்று மட்டும்,
இதற்கு விதிவிலக்கு...
ஏனென்றால் இக்கடிதம்,
உன்னிடம் வந்துவிட்டதே...

நான் உன்னை காதலிக்கிறேன்...
4

ஆனந்தம் ஆரம்பம்



குவளை மலரில்,
நீர் வடிவது போல்,
கலங்கம் படராத,
முக வாயில் வழிந்த,
எச்சில் உமிழ் நீரை,
கண்கொள்வதும் ஆனந்தமே...

பேசுதல் அறியாத,
பேசுதலும் தெரியாத,
நான் பெற்ற பேதையை,
யான் காணும்,
சிறு கனமும், ஆனந்தமே...

பிஞ்சு விரலால்,
முகம் வருடி,
எச்சில் வழிய,
நீ எனக்கு, அளித்த
முதல் முத்தமும், ஆனந்தமே...

காய்ந்த வயிற்றில்,
நீர் கரைப்பதற்கு,
என்னவளை அழைக்க,
நீ எழுப்பும்,
அழுகுரலும் ஆனந்தமே...

எந்தன் கை பிடித்து,
தத்தித் தத்தி, அடி வைத்து,
நீ தரும் புன்னைகையும்,
ஆனந்தமே...

இவ்வாறு நீ உதிர்க்கும்...
ஒவ்வொரு செயலும்,
எனக்கு ஆனந்தமே...
4

ஊமை பொம்மைகள்



என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
உருவங்கள் யாவும்,
பொம்மைகளாய் தெரியுதடி...
என் அருகில்,
நீ இருந்தால்...

என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
பொம்மைகள் யாவும்,
ஊமையாய் போனதடி...
சிரித்து புன்னகைத்து,
நீ பேசினால்...

என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
ஊமைகள் யாவும்,
உவமையாய் போனதடி...
கன்னத்தை கிள்ளி,
நீ கொஞ்சினால்...


என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
உவமைகள் யாவும்,
உருகியே போனதடி...
எனக்காக நீ தந்த,
அழகான முத்தத்தால்...
0

நிழல்



என்னுடன் வரும் நிழலை,
எனதென்று நினைத்திருந்தேன்...
எனக்காக நீ அனுப்பிய,
நினைவுகள் என்று,
இன்று தான் உணர்ந்தேன்...
உந்தன் பிரிவில்
0

எங்கே இருக்கிறாய்?


மொட்டு விரியா,
மல்லிகையை பரித்து,
கருஞ் சாந்திட்டு,
மலர்ந்ததுள்ள,
நின் கண்களும்...

நீர் பகைமை கொண்டாலும்,
நீரோடு உறவாடும்...
அழகிய புன்னகையொடு,
தேன் தமிழ் பயின்ற...
தாமரையாய் தோன்றும்,
நின் இதழ்களும்...

மழை ஓய்ந்த,
வெளிர்ந்த வானில்...
சிவந்த சூரியனாய்,
தழல் தெரிக்கும்...
நீ இட்ட,
நுதற் பொட்டும்...

என்னை ஒவ்வொரு கனமும்,
வா என்றே அழைக்குதடி...
ஆனால் பெண்ணே நீ,
என் அருகில் இல்லையடி...
3

அந்தரத்தில் குதிக்குதடி மனது



என்னை இழுத்துக் கொண்டு
அந்தரத்தில் குதிக்குதடி மனது...
அழகாய் குடை விரிக்கும்
உன் தாமரை இதழ்களால்...
ஈர்ப்பு விசையறியாது உதிர்க்கும்
உன் சின்னஞ்சிறு புன்னகையால்...
வண்ணமறியாது மலரும்
உன் கன்னக் குழியால்...
7

ஓரக் கண்ணால்...



ஓரக் கண்ணால்
பார்த்துக் கொண்டு
என்னைக் கடந்து
செல்லும் பொழுது
உன்னுடனே வந்துவிடுகிறது
என் மனது...

இனியும்
என்னைக் கடந்து
செல்லும் பொழுது
ஓரக் கண்ணால்
பார்த்தால்...
எந்தன் உடலில்
மீதம் இருக்கும்
உயிரும்
உன்னுடன் வந்துவிடும்...

இப்போது நீ
என்ன செய்யபோகிறாய்?
0

இப்படிக்கு பசுமை - 4



என்னை தொட்டுச்
செல்லும் போது,
எந்தன் குளிர்ச்சியை
களவாடிச் சென்றாய்...

போகும் வழியதனில்,
மனித உயிர்களுக்கு,
தானமாய் தந்தாய்...

அன்று...
எங்கு காணினும்,
பச்சை மிளிர்ந்தது.
இன்று...
வறட்சியே எஞ்சியுள்ளது.

இத்தருணத்தில்,
மனித உயிர்களுக்கென,
குளிர்ச்சியை கேட்டால்,
நான்
என்ன செய்வேன்?

இப்படிக்கு,
பசுமை
4

முத்தம்



வெளிச்சம் இல்லா,
இதழ்களுக்கு இடையில்,
சத்தம் மட்டுமே,
சக்கரவர்த்தி...
அங்கே,
அவளும் நானும்
மெழுகுவர்த்தி...