வானில் தெரியும் நிலவும், தெருவில் திரியும் நாயும், ஓரமாய் உறங்கும் பூனையும், தாடி வைத்த பூச்சாண்டியும், பக்கத்து வீட்டு பாப்பாவும், மின்னிக்கொண்டு போகும் வானூர்தியும், நான் உணவு உண்ண, நீ காட்டும் பொம்மைகள்!
கண்ணீர் துடைக்கும் கைகளுக்கும், சாய்ந்து உறங்கும் தோள்களுக்கும், அன்போடு முத்தமிடும் இதழ்களுக்கும், நடை பழக்கிய விரல்களுக்கும், இத்தனை செய்தும், ஏதும் அறியாத பிள்ளையைப் போன்றே... அமைதியாய் இருக்கும் உனக்கும், உன்னை தாயாய் தந்த இறைவனுக்கும், ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளால் நன்றிகள்!
நான் விளையாடும் பொழுது, என்னுடன் நீயும் விளையாடுகிறாய்! நான் சிரிக்கும் பொழுது, என்னுடன் நீயும் சிரிக்கிறாய்! நான் அழும் பொழுது மட்டும், என்னுடன் சேர்ந்து அழாமல், நீ ஏன் பதரிப்போகிறாய்?
கரு முளைத்த கனமே, கண்களுக்குள் ஆயிரம் கனவுகள்! மனதிற்குள் ஓராயிரம் பெயர்கள்! ஆண் பிள்ளைக்கும், பெண் பிள்ளைக்கும், தனித்தனியே பட்டியலிட்டு, யோசித்துக் கொண்டிருக்கிறாய்!
கரு தரித்த பின், பத்து மாதங்கள் பொறுமையாய், கருவறையில் உருவம் தீட்டி, உயிரும், உணவும் கொடுத்து, பிள்ளைப் பேறு காண்பது, தாய்க்கு இன்பத்திலும் பேரின்பமே...
இரவின் குளிரோசையை உணர்த்தும், நதியின் நீரை திருடி... நிலவின் சின்னத் துண்டுகளோடு, பாலில் கரைத்த முல்தானி இட்டு... கரைத்த மிருதுவான கலவையை, மயிற் பீலி கொண்டு, முகம் வருடுதல் போன்றே... பிள்ளையில் கரங்களைக் கொண்டு, அன்னை தன் முகம் வருடுதலும், மென்மையாம்!