சன்னலோரம் ஒரு பார்வை...
வகுப்பறை வாசலில்,
என்னை பார்த்து,
விடை பெறுவதற்கு,
கை அசைத்துவிட்டு...
பிரிய மனமின்றி,
சன்னலின் ஓரம்,
எட்டிப் பார்த்து,
வருத்தத்துடன் நீ சென்றதும்...
உன்னுடயை பிரிவால்,
பள்ளியின் முதல் நாளில்,
நான் அழுத அழுகையும்...
அழகிய கவிதைகள்!
அழகான பொய்கள்!
பூமி தொட விழையும் மழையின்,
நீர்த் துளிகள் என்னை தொடாமல்,
சேலைக் குடைகுள் என்னை மறைத்தாய்!
வெடிக்கும் இடி முழக்கம்,
என் காதுகளில் எட்டாமல்,
மார்போடு இருக்க அணைத்தாய்!
புன்னகையால் படம் எடுக்கும் மின்னலுக்கு,
முகம் காட்ட வேண்டாம் என்று,
என் கண்களையும் கைகளால் மூடினாய்!
இதனால்...
என்னை தூரலாய் தொட வந்த மழையும்,
எனக்காக இசை மீட்டி தந்த இடியும்,
என்னை படம் பிடிக்க வந்த மின்னலும்,
உன்னை பார்த்து பொறாமை பட்டதாய்...
ஒவ்வொரு முறையும் இவ்வளவு அழகாக,
என்னிடம் எதற்காக பொய் சொல்கிறாய்?
தூரல் மழை...
வீட்டின் முற்றத்தில் நின்று...
பெய்யும் மழையின் சாரலை,
கைகளின் குவியத்தில் ஏந்தி,
குளிர்ச்சியை இரசித்திருந்த பொழுது...
மழையின் தூரல் துளியை,
என் முகத்தில் தெளித்து...
நீயும் என்னை போன்றே,
சின்னக் குழந்தையாய் மாறி,
என்னுடன் விளையாடி தருணத்தை,
இமை அளவும் மறக்கவில்லை!
அழகிய பொழிவுகள்!
எத்தனை எத்தனையோ மலர்கள் பறித்து,
அதில் ஒன்றை தேர்வு செய்து,
அதனை அழகாய் சூட வைத்து,
எனக்காகவே பூத்ததாய் பொய் சொல்வாய்!
தத்தித் தவழ்ந்து திரியும் போது,
என்னை அறியாமல் கதவில் முட்டினால்,
பிழை செய்ததாய் கதவை அடித்துவிட்டு,
எனக்கு சமாதானங்கள் பல சொல்லி,
கண்ணீர் துடைத்து அழுகையை நிறுத்துவாய்!
கைகளின் தொட்டிலில் என்னை ஏந்தி,
நெற்றி மீது நெற்றி வைத்து,
மூக்கின் மீது மூக்கு முட்டி,
கண்களால் முத்தமிட்டு அழகாய் கொஞ்சுவாய்!
இத்தனையையும் செய்துவிட்டு,
ஏதும் செய்யாததாய் சொல்லும்,
உன்னுடைய அன்பிற்கு,
நிகர் ஏதும் உண்டோ?
அழகிய ஓவியங்கள்!
நீரில் நனைந்த,
பழைய சோரும்...
உப்பில் ஊறிய,
எலுமிச்சை ஊறுகாயும்...
பகிர்ந்துண்டு மகிழ்ந்த,
அந்த நாளின்...
அனைத்து நிகழ்வுகளும்,
நினைவினில் வரைந்த,
அழகிய ஓவியங்கள்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)