2

என்று பிறந்தாய்?



என்னுள்ளே பிறந்து,
நானறியாமல் வளர்ந்தவளே...
என்னவளை கண்டதும்
முகத்தை மறைத்தவளே...
வெட்கத்தை மட்டும்
வஞ்சனை ஏதுமின்று
வாரி இரைத்தவளே...
அவளது பார்வையால்
சொடுக்குப் போட்டு
அழைத்ததும் சென்றுவிட்டாய்...

என் காதலே
நீ எப்போது
என்னுள்ளே துளிர்விட்டாய்?
5

ஆயிரம் அழகுகள்


பிள்ளையின் சிரிப்பில்
ஆயிரம் பருக்கைகள்
உண்டதாய் எண்ணுவாய்...

புரியா பிதற்றலில்
ஆயிரம் அர்த்தங்கள்
கண்டதாய் அறிவாய்...

விழியில் மையிட்டு
நுதற் பொட்டிட்டு
ஆயிரம் ஓவியங்கள்
ஒன்றாய் கண்டதாய்
ஆச்சரியத்தில் கொஞ்சுவாய்...

கன்னங்கள் கிள்ளி
அழகாய் கொஞ்சி
வருடி முத்தமிடுவாய்...

இவைகளை எண்ணியே
எந்தன் மனமின்று
பிள்ளையாய் மாறியதே
இவையெல்லாம் என்னைத்
தொட்டிலிட்டு தாலாட்டியதே
4

மீண்டும் பள்ளிக்கு போகலாம்...


உறங்காமல் கண் விழித்த நாட்கள்,
அயர்ந்து சுவரோடு சாய்ந்த நாட்கள்,
புத்தகத்தில் முகம் தொலைத்த நாட்கள்,
எழுது கோள்களுடன் பேசிய நாட்கள்,
நட்பு சகாக்களுடன் நகையாடிய நாட்கள்,
தாய் மடி தேடிய நாட்கள்,
இவ்வாறு...
கடந்த நாட்களைத் திரும்பிப் பார்த்திடினும்,
எண்ண ஏட்டுக்களை புரட்டிப் பார்த்திடினும்,
என்று வரும் இந்த சுகம்?
மீண்டும் பள்ளிக்கு போகலாம்...
5

அமாவாசை நிலவுகள்



விரல் எட்டிப் பார்க்கும்,
நகக் கண்களை வெட்டி,
மண்ணிற்கு தானம் வார்த்து,
வீணடித்தது போதும் பெண்ணே...

இம்முறை அவற்றை எல்லாம்,
தானமாய் என்னிடம் கொடுத்துவிடு.
வெண்ணிலவு இல்லா நாளன்று,
கார் வண்ண மேகத்தில்,
பொங்கும் வெள்ளிப் புன்னகைகளாய்!
வெள்ளிப் பிறை நிலவாய்!
நின் நகங்களை யாவும்,
அனுப்பி வைக்க எண்ணுகிறேன்.
6

இனியதாய் ஒரு உறக்கம்


நிறம் காய்ந்து உயிர் காயாத,
விரல்கள் என்னும் நரம்புகள் ஓடும்...
பூவாய் மலர்ந்த கைகளைக் கொண்டு,
உன் மடியில் நான் உறங்க...
எந்தன் தலை கோதுவாய் பெண்ணே!
10

வெட்கத்தின் பிறப்பிடம்



முகம் முழுதும் வீசுதடி...
உந்தன்,
வெட்கம் எனும் பூங்காற்று!

பிறப்பிடம் தெரியாமல் தோற்றதடி...
எந்தன்,
பார்வை எனுங் கீற்று!
6

நூலிழை அளவு வெட்கம் போதும்


நூலிழை அளவு தான்,
நிந்தன் வெட்கம் என்றாலும்...
போதும், போதும்
என்றது என் மனது.

பாவம்!

அவனுக்கு எப்படி தெரியும்?
நின் வெட்கத்தின் விலை,
மதிப்புகள் அற்றது என்று!
7

மீதமான வெட்கம்


கண்களின் ஓரம்
மிதமான குளிரும்;
முகம் முழுதும்
தெரித்து ஓடும்
மீதமான வெட்கமும்;
ஒன்றாகக் கிடைத்தால்
இதமான இரவில்...
நிந்தன் நினைவும்,
எந்தன் மனமும்,
ஒன்றாய் இணைய...
இமை இரண்டும்
வருடுதல் தகுமோ?
5

எந்நாளும் இரவாக...






நின் கூந்தலின்
வாடை நுகர்ந்தே
இரவினில் பாதி போனதடி

நின் விழியில்
இதழ் வருடி
மீதியும் பகலாய் ஆனதடி

நிலவாய் நானிருந்தால்
சூரியனை சிறையிட்டு
விடியலையும் இரவாக்கி
உன் வசப்பட்டு இருப்பேனடி
9

தீண்டல்


விழியால், சுவாசக் காற்றல்,
விரலால், உள்ள உணர்வால்
எனைத் தீண்டிப் பார்த்தாய்
பயனேதும் இல்லை யென்று
சற்று விலகியே போனாய்...
பெண்ணே நின் தீண்டலை
யான் நிலையாய் பெறவே
சிலையாய் நின்றதை யறிவாயோ?