2

நன்றிகள்!


கண்ணீர் துடைக்கும் கைகளுக்கும்,
சாய்ந்து உறங்கும் தோள்களுக்கும்,
அன்போடு முத்தமிடும் இதழ்களுக்கும்,
நடை பழக்கிய விரல்களுக்கும்,
இத்தனை செய்தும்,
ஏதும் அறியாத பிள்ளையைப் போன்றே...
அமைதியாய் இருக்கும் உனக்கும்,
உன்னை தாயாய் தந்த இறைவனுக்கும்,
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளால் நன்றிகள்!
2

புண்ணியம்


நான் விளையாடும் பொழுது,
என்னுடன் நீயும் விளையாடுகிறாய்!
நான் சிரிக்கும் பொழுது,
என்னுடன் நீயும் சிரிக்கிறாய்!
நான் அழும் பொழுது மட்டும்,
என்னுடன் சேர்ந்து அழாமல்,
நீ ஏன் பதரிப்போகிறாய்?

உன்னை தாயாய் பெற்றதனால்,
புண்ணியம் கோடி கண்டேன்!
2

பட்டியல்


கரு முளைத்த கனமே,
கண்களுக்குள் ஆயிரம் கனவுகள்!
மனதிற்குள் ஓராயிரம் பெயர்கள்!
ஆண் பிள்ளைக்கும்,
பெண் பிள்ளைக்கும்,
தனித்தனியே பட்டியலிட்டு,
யோசித்துக் கொண்டிருக்கிறாய்!

பெண்ணே...
அன்பும் ஆசையும்,
கலக்கும் தருணம்,
இதுதானோ?

இணையேதும் இல்லை...


கைகளையும் கால்களையும்,
உதைத்துக் கொண்டே,
அழகாக சிரிக்கும்,
தவழுதலும் அறியாத,
சின்னஞ்சிறு பிள்ளையை,
கைகளில் ஏந்தி...
தோலோடு சாய்த்து...
தட்டிக் கொடுத்து,
தூங்க வைக்கும்...
தாயின் அன்பிற்கு,
இணையேதும் இல்லை!

பேரின்பம்...


கரு தரித்த பின்,
பத்து மாதங்கள் பொறுமையாய்,
கருவறையில் உருவம் தீட்டி,
உயிரும், உணவும் கொடுத்து,
பிள்ளைப் பேறு காண்பது,
தாய்க்கு இன்பத்திலும் பேரின்பமே...
0

தாலாட்டு...


கடலையில் குளியலிட்டு,
சாம்பிராணில் மேனி உளர்த்தி,
கருவேலம் மை கொண்டு,
நெற்றியிலும்... கன்னத்திலும்...
அழகாக பொட்டு வைத்து,
சேலையில் தொட்டி கட்டி,
இளம்பிள்ளையை உறங்க வைக்க,
தாலாட்டு நீ பாடுகையில்,
ஊரே உறங்கி போனதம்மா!

வருடல்


இரவின் குளிரோசையை உணர்த்தும்,
நதியின் நீரை திருடி...
நிலவின் சின்னத் துண்டுகளோடு,
பாலில் கரைத்த முல்தானி இட்டு...
கரைத்த மிருதுவான கலவையை,
மயிற் பீலி கொண்டு,
முகம் வருடுதல் போன்றே...
பிள்ளையில் கரங்களைக் கொண்டு,
அன்னை தன் முகம் வருடுதலும்,
மென்மையாம்!

பிள்ளைபேறு!


குழந்தையின்...
பிறை சிரிப்பும்,
வெட்டப்படாத கன்னக் குழியும்,
கலங்கப்படாத கண்களும்,
பிஞ்சுக் கால்களும்,
கூழாங்கல் மேனியும்,
பிதற்றல் மொழி பேசும் இதழும்,
எப்பொழுதும் ஈர்ப்பதால்...
உறக்கம் மறந்து இருக்கிறாள்,
பிள்ளைபேறு பெற்றவள்!

அம்மா!!!


மெளனம் என்னும் தவம் களைத்து,
அழகாய் ஆனந்தமாய் ஈன்றவளை நோக்கி,
உரைந்த உயிரையும் உருக வைக்கும்...
ஆதியில் தோன்றிய மழலை உதிர்க்கும்...
"அம்மா" என்னும் உயர் வார்த்தைக்கு,
கோடி கோடியாய் குவிந்திருக்கும்,
ஆயிரம் அர்த்தமுள்ள வார்த்தைகளும்,
நிகர் செய்ய ஈடு பெறுமோ?

எத்தனை தவம் செய்தாய்?


இதழ் விரியா மலர் போல,
விரல்கள் குவிந்த இரு கைகளையும்...
மெளனமும் மொழியும் அரியா,
அழு குரல் அறிவிப்பையும்...
எங்கும் காணா அழகை குவித்த,
களங்கம் இல்லா முகத்தையும்...
விரிந்த மலருக்குள்,
மொட்டாய் முளைத்திருக்கும்,
விழி இரண்டினையும்...
மண்ணோடு கவி பாடாத,
மலர் போன்ற பாதங்களையும்...
முதல் காட்சியாய் காண,
எத்தனை தவம் செய்தாய்?