3

மழையெனும் தோழன்

மனதோடு வேர்விட்ட துயரம்
மரமாய் வளர்ந்து விழியோரம்
மரக்கிளை இலை யமர்ந்த
நிறமற்ற பனித் துளியாய்
கண்ணீர் வார்க்கும் தருணம்
மழையெனும் என் தோழன்
தொங்கற் நீர் தெரிப்பதற்குள்
விண் வேய்ந்த கூரையகற்றி
உப்பு நீரோடு உறவாடுவான்
3

கனவு கொழிக்கும் உறக்கம்

இரு வெண்ணிற வானில்,
காருவா நிலவு இரண்டும்,
கருத்த நூல் தொங்கற்...
இமையெனும், திரை மூடி
கனவினில், கண் விழிக்கும்!
இவையெலாம் நின் மடியில்,
விரல்களின் வருடலில் நிகழும்

ஈன்றவள் ஈட்டிய செல்வம்...
இனியதாய், கனவு கொழிக்கும்,
உறக்கம் அமைய வாழ்த்தும்!
2

வலி

நான் என்றும் ஒற்றையனாய்
கரையோரம் மணல் மிதித்து
பாதம் குழியிட்டுச் சென்று
கடக்கும் வினாடி ஒவ்வொன்றும்
பாதம் பரைத்தக் குழியதனில்
நின்னைக் காணாத வலியதனை
ஒன்றாய் சேர்த்து சுவடுகளாய்
புதைத்து விட்டுச் செல்லும்
பேதை குணம் பாராட்டும்
உயிரற்ற என் மனது
4

என் காதல்

சூரியனின் மனக் குளிர்வை
அந்தி வானெங்கும் கொண்டாடும்
மஞ்சள் நிற மங்கையின்
புன்னகையோ என் காதல்
2

அந்தி வான் அழகியே

மெலிந்த பச்சைக் கொடியின்
மெல்லின இடை வருடி
மஞ்சற் குளியல் உண்டு
மணம் தெரிக்கும் பூவே...
மகுடியூதி நினை பரித்து
ஐவிரல் குதிரைப் பூட்டிய
தலைவனவன் கை யதனில்
தேவதையாய் நினை யேற்றி
பேதையவள் முக வீதியில்
உலாவர இச்சை கொண்டாயோ?
அந்தி வான் அழகியே!
15

தொப்புள் கொடி

மெல்லிய காற்றின்
அசைவில் நின்று
நாட்டியம் காணா
முதலுறவு காட்டிய
தொப்புள் கொடிதனை
தாயிடம் தானம் பெற்று
தன் யாக்கைத் திருகி
உயிரளித்த முதல் தோழிக்கு
உன் வேதனையில் பாதியை
பிறப்பால் தானமாய் இட்டாய்
22

உயிரிசை

ஒரு வாய் கொண்டு
ஈருயிர் பகிர்ந்து உண்ணும்
ஈரைந்து மாத உறவுக்கு
ஈடு இணை இவ்வுலகில்
எவறேனும் கண்ட துண்டோ

கருத்த அறை அதனில்
தாயவள் உடல் உரிஞ்சி
செங்காந்தற் மலர் மேலே
செந்தேன் தடவியது போல்
தன் உடல் தரித்து
தானறிந்த அழுகை யெனும்
நாதம் முழுங்கி உலகிற்கு
தன் வருகையை யறிவிக்கும்
இசை நிகழ்வை யுணர்ந்து
மனமகிழும் தாய் அவளின்
உணர்வுகளை உணர்ந்த துண்டோ
2

அனாதை

இருவகை குழந்தையாம்
மலர்ந்த வாடை
சிறிதும் இழக்காது
பிறவி கண்டிருக்கும்
சிறு துளிரையும்
உயிர் துறக்கக்
காத்து கிடக்கும்
உடலுருகிய தொன்றையும்
வீதியோடு வாழவிட்ட
விழியழிந்த மூடர்கள்
இங்கே வேண்டாமே
நரகுல நாயகர்கள்
செழித்து வாழும்
வேற்றுலகம் கண்டெடுத்து
குழந்தை செல்வத்தை
துறந்து வாழும்
ஐயறிவு கொண்டு
அனாதை நாய்களாய்த்
திரியும் பேய்களைத்
துரத்துவோம் வருங்களேன்
4

தாய்

விதையாய் விழுந்த எனை
உன்னில் புதையலாய் இட்டாய்

விதையதனில் துளிர் தெரிக்க
உதிரம் உருக்கி உரமாய்
எந்தனில் உயிர் ஊற்றினாய்

திங்கள் பத்து களைய
நின் வயிற்றுத் தொட்டிலெனும்
ஊஞ்சலில் எனை இட்டாய்

பெண் எனும் போர்வைக்குள்
சேய் பின்பு தாரமாகி
என்னுடையத் தாய் ஆனாய்

உன்னை பற்றி எண்ணியே
வியப்புற்றேன் என் தாயே
2

வைரம்

மலையிரண்டில் மையத்தில்
தலையெட்டிப் பார்த்திருக்கும்
விடியற்பொழுது நாயகனின்
சிரிப்பிற்கு ஒப்புமையோ
விரலெட்டிப் பார்க்கும்
மோதிரம் அமர்ந்த
விரல் கிளையின்
மேல் மலர்ந்த
வெண்குடை விரித்து
நின் விழி நோக்கும்
வைரக் கல்