உறங்காமல் கண் விழித்த நாட்கள், அயர்ந்து சுவரோடு சாய்ந்த நாட்கள், புத்தகத்தில் முகம் தொலைத்த நாட்கள், எழுது கோள்களுடன் பேசிய நாட்கள், நட்பு சகாக்களுடன் நகையாடிய நாட்கள், தாய் மடி தேடிய நாட்கள்,
இவ்வாறு...
கடந்த நாட்களைத் திரும்பிப் பார்த்திடினும், எண்ண ஏட்டுக்களை புரட்டிப் பார்த்திடினும், என்று வரும் இந்த சுகம்? மீண்டும் பள்ளிக்கு போகலாம்...
விரல் எட்டிப் பார்க்கும், நகக் கண்களை வெட்டி, மண்ணிற்கு தானம் வார்த்து, வீணடித்தது போதும் பெண்ணே...
இம்முறை அவற்றை எல்லாம், தானமாய் என்னிடம் கொடுத்துவிடு. வெண்ணிலவு இல்லா நாளன்று, கார் வண்ண மேகத்தில், பொங்கும் வெள்ளிப் புன்னகைகளாய்! வெள்ளிப் பிறை நிலவாய்! நின் நகங்களை யாவும், அனுப்பி வைக்க எண்ணுகிறேன்.
கண்களின் ஓரம் மிதமான குளிரும்; முகம் முழுதும் தெரித்து ஓடும் மீதமான வெட்கமும்; ஒன்றாகக் கிடைத்தால் இதமான இரவில்... நிந்தன் நினைவும், எந்தன் மனமும், ஒன்றாய் இணைய... இமை இரண்டும் வருடுதல் தகுமோ?