பிள்ளைபேறு!
குழந்தையின்...
பிறை சிரிப்பும்,
வெட்டப்படாத கன்னக் குழியும்,
கலங்கப்படாத கண்களும்,
பிஞ்சுக் கால்களும்,
கூழாங்கல் மேனியும்,
பிதற்றல் மொழி பேசும் இதழும்,
எப்பொழுதும் ஈர்ப்பதால்...
உறக்கம் மறந்து இருக்கிறாள்,
பிள்ளைபேறு பெற்றவள்!
அம்மா!!!
மெளனம் என்னும் தவம் களைத்து,
அழகாய் ஆனந்தமாய் ஈன்றவளை நோக்கி,
உரைந்த உயிரையும் உருக வைக்கும்...
ஆதியில் தோன்றிய மழலை உதிர்க்கும்...
"அம்மா" என்னும் உயர் வார்த்தைக்கு,
கோடி கோடியாய் குவிந்திருக்கும்,
ஆயிரம் அர்த்தமுள்ள வார்த்தைகளும்,
நிகர் செய்ய ஈடு பெறுமோ?
எத்தனை தவம் செய்தாய்?
இதழ் விரியா மலர் போல,
விரல்கள் குவிந்த இரு கைகளையும்...
மெளனமும் மொழியும் அரியா,
அழு குரல் அறிவிப்பையும்...
எங்கும் காணா அழகை குவித்த,
களங்கம் இல்லா முகத்தையும்...
விரிந்த மலருக்குள்,
மொட்டாய் முளைத்திருக்கும்,
விழி இரண்டினையும்...
மண்ணோடு கவி பாடாத,
மலர் போன்ற பாதங்களையும்...
முதல் காட்சியாய் காண,
எத்தனை தவம் செய்தாய்?
முதல் முத்தம்!
ஈன்ற பிள்ளையின்,
முதல் குரல் கேட்டு,
அரை மயக்க நிலையிலும்,
முகம் காண துடிப்பதும்...
கண்டதும்,
ஒரு புறம் சாய்ந்து,
நுதற் மையம் தடவி,
அன்பை கொட்டி முத்தமிடுவதும்...
ஆ!
பார்க்க எத்தனை அழகு?
பார்ப்பவர்கள் கண்களில் தோன்றும்...
ஆனந்தமும் அழகு, அழகு!
வார்த்தைகள் ஏதும் இல்லையடி!
காணாது செதுக்கிய,
கருவறைச் சிலையை,
உயர் வலி தாங்கி,
உமிழும் நிகழ்வால்,
ஈன்ற பிள்ளையை,
பார்க்கும் முன்னமே,
அதன்...
அழு குரல் கேட்டு,
உள்ளம் மகிழும் பெண்ணே...
என்னிடம் நின்னை போற்ற,
வார்த்தைகள் ஏதும் இல்லையடி!
நீ அரிதாரம் பூசாத கண்ணனோ?
உனக்கென்று எண்ணாமல்
கருவிற்கு ஏற்றதென
சத்துக்களை உண்டு
நின் வயிற்றிலோர்
உருவம் செய்தாய்
காணா உருவை
ஊண் கொண்டு
உயிர் கொண்டு
கரு அறையினுள்
கூடு கட்டி
மிதமான வெப்பத்தில்
மிருதுவாய் வளர்த்தாய்
இரவும் பகலும்
அறியா கருவை
சுமையென கருதாது
இமையென காத்தாய்
கருவை ஓயாது காக்கும்...
நீ என்ன
நீல அரிதாரம் பூசாத
கண்ணனோ?
பெண்ணாய் பிறந்த பிரம்மன்!
விதையாய் இட்ட அணுவை,
வேரூன்றி மரமாக மாற,
உயிரும் உருவமும் தந்து...
உணவும் உறைவிடமும் தந்து...
குருதியும் சதையும் கொண்ட,
உருவ பிண்டமாய் படைத்துவிட்டாய்!
பெண்ணாய் பிறந்த,
பிரம்மன் என்பது நீதானோ?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)