2

அன்பெனும் ஒளி

கருப்பு நிறத்தையும் தோற்கடிக்கும்
நிறத்தை உமிழ்ந்திருக்கும் இடமதில்
முருக்கித் திரித்த வெண்நாவுடைய
மண்ணெரித்து எண்ணெய் உண்ட
வெண்நா எரிக்கும் விளக்கே...
நீயறிந்த திசை எல்லாம்
வெளிச்சமெனும் புகழ் நீட்டி
ஒளி வரவைக் காட்டுகிறாய்
எந்தாயும் உனை காட்டில்,
வெளிச்சம் அதிகம் தருவாள்!
அவளின் அன்பெனும் ஒளியதற்கு
உன்னிடம் ஈடு உண்டோ?
2

தவத்தாய்

உமிழ்தலில் உலகங் கண்டு
நூலிறுகி முதுகுத் தண்டாய்
மாற்றம் காணுந்திங்கள் மட்டில்
பிள்ளையின் தலைதனைத் தாங்கிய
தெய்வத்தின் கரங்கள் அதனை
உடல் தகன காலத்திலும்
தீயழிக்கப எண்ண யேட்டில்
என்றென்றும் நிலைத்து இருக்கும்
நான் ஈன்றத் தவத்தாயே
3

பக்தன்

உயிர் பிரியும் மட்டில்
நிற்காது ஓட்டம் விடும்
செங்குருதி நீர் பிடித்து
நிறம் மாறா வெள்ளாடை
உடுத்திய மனக் கண்ணில்
தேக்கி வைத்த நிந்தன்
அன்பு கலந்து ஊட்டிய
வெண் நிறக் குருதியை
உண்டதனால் உயிர் வாழும்
பித்தன் இவன் என்றும்
நின் பெயரை துதியெனப்
பாடித் திரியும் பக்தன்
3

மழையெனும் தோழன்

மனதோடு வேர்விட்ட துயரம்
மரமாய் வளர்ந்து விழியோரம்
மரக்கிளை இலை யமர்ந்த
நிறமற்ற பனித் துளியாய்
கண்ணீர் வார்க்கும் தருணம்
மழையெனும் என் தோழன்
தொங்கற் நீர் தெரிப்பதற்குள்
விண் வேய்ந்த கூரையகற்றி
உப்பு நீரோடு உறவாடுவான்
3

கனவு கொழிக்கும் உறக்கம்

இரு வெண்ணிற வானில்,
காருவா நிலவு இரண்டும்,
கருத்த நூல் தொங்கற்...
இமையெனும், திரை மூடி
கனவினில், கண் விழிக்கும்!
இவையெலாம் நின் மடியில்,
விரல்களின் வருடலில் நிகழும்

ஈன்றவள் ஈட்டிய செல்வம்...
இனியதாய், கனவு கொழிக்கும்,
உறக்கம் அமைய வாழ்த்தும்!
2

வலி

நான் என்றும் ஒற்றையனாய்
கரையோரம் மணல் மிதித்து
பாதம் குழியிட்டுச் சென்று
கடக்கும் வினாடி ஒவ்வொன்றும்
பாதம் பரைத்தக் குழியதனில்
நின்னைக் காணாத வலியதனை
ஒன்றாய் சேர்த்து சுவடுகளாய்
புதைத்து விட்டுச் செல்லும்
பேதை குணம் பாராட்டும்
உயிரற்ற என் மனது
4

என் காதல்

சூரியனின் மனக் குளிர்வை
அந்தி வானெங்கும் கொண்டாடும்
மஞ்சள் நிற மங்கையின்
புன்னகையோ என் காதல்
2

அந்தி வான் அழகியே

மெலிந்த பச்சைக் கொடியின்
மெல்லின இடை வருடி
மஞ்சற் குளியல் உண்டு
மணம் தெரிக்கும் பூவே...
மகுடியூதி நினை பரித்து
ஐவிரல் குதிரைப் பூட்டிய
தலைவனவன் கை யதனில்
தேவதையாய் நினை யேற்றி
பேதையவள் முக வீதியில்
உலாவர இச்சை கொண்டாயோ?
அந்தி வான் அழகியே!
15

தொப்புள் கொடி

மெல்லிய காற்றின்
அசைவில் நின்று
நாட்டியம் காணா
முதலுறவு காட்டிய
தொப்புள் கொடிதனை
தாயிடம் தானம் பெற்று
தன் யாக்கைத் திருகி
உயிரளித்த முதல் தோழிக்கு
உன் வேதனையில் பாதியை
பிறப்பால் தானமாய் இட்டாய்
22

உயிரிசை

ஒரு வாய் கொண்டு
ஈருயிர் பகிர்ந்து உண்ணும்
ஈரைந்து மாத உறவுக்கு
ஈடு இணை இவ்வுலகில்
எவறேனும் கண்ட துண்டோ

கருத்த அறை அதனில்
தாயவள் உடல் உரிஞ்சி
செங்காந்தற் மலர் மேலே
செந்தேன் தடவியது போல்
தன் உடல் தரித்து
தானறிந்த அழுகை யெனும்
நாதம் முழுங்கி உலகிற்கு
தன் வருகையை யறிவிக்கும்
இசை நிகழ்வை யுணர்ந்து
மனமகிழும் தாய் அவளின்
உணர்வுகளை உணர்ந்த துண்டோ