கதைகள் கவிதைகளாய்!


கல்லூரி விடுதியில்,
என்னுடைய அறையில்,
நெடுநாட்களாக...
என்னை சுமந்த நாற்காலிகளும்,
சாய்ந்து நின்ற கதவுகளும்,
எந்தன் உறக்கம் காணாத தலையணையும்,
ஆயிரம் ஆயிரம் கதைகளாய்...
உந்தன் பிரிவின் வலியையும்,
உந்தன் அன்பின் இழப்பையும்,
கவிதையாய் சொல்லும்!
2

பிரிவின் வலி...


கல்லூரி விடுதியின்,
தாழிட்ட அறையில்...
பாலையில் எறியும்,
மனித உயிரின்,
பெருத்த வலியோடு,
ஒவ்வொரு நாளும்,
விடைபெறும் என்று...
உன்னை பிரியும்,
அன்றைய பொழுதில்,
நான் அறிந்திருக்கவில்லை!

அன்பைத் தேடி...


கல்லூரி விடுதியின்,
உணவுப் பட்டியலில்,
தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை...
உணவோடு பகிரப்படும்,
அம்மாவின் அன்பும் அக்கறையும்!
2

பெற்ற பலன்


பிறக்கும் குழந்தையின்,
உடலுக்கு உயிரையும்,
மனதிற்கு அன்பையும்,
நிரப்பித் தருகிறாய்!

சிறிது காலம்,
பிள்ளைக்கு உணவாக,
குருதியையும் தருகிறாய்!

நிரப்பித் தந்த,
அன்பை எல்லாம்,
உயிர்களிடம் வெளிப்படுத்தும்,
பண்பையும் தருகிறாய்!

ஒவ்வொரு நிலையிலும்,
ஒவ்வொரு செயலுக்கும்,
ஊன்றுகோலாய் இருந்து,
வாழ்க்கையில் வெற்றியையும்,
தேடித் தருகிறாய்!

பலன் ஏதும் வேண்டாது,
நீ செய்த செயல்களுக்கு,
நான்...
என்ன செய்ய போகிறேன்?
3

அறை எண் 9


வாடை காற்றால்,
அசையும் மரங்கள் கொண்ட,
கல்லூரி விடுதியில்,
சன்னலின் ஓரம்,
தனியாய் அமர்ந்து,
இரசிப்பதும்...
வருந்துவதும்...
ஏங்குவதும்...
உந்தன் அன்பை எண்ணியே!
3

பொம்மைகள்!


வானில் தெரியும் நிலவும்,
தெருவில் திரியும் நாயும்,
ஓரமாய் உறங்கும் பூனையும்,
தாடி வைத்த பூச்சாண்டியும்,
பக்கத்து வீட்டு பாப்பாவும்,
மின்னிக்கொண்டு போகும் வானூர்தியும்,
நான் உணவு உண்ண,
நீ காட்டும் பொம்மைகள்!

2

கொஞ்சலின் ஆனந்தம்!


நீ கொடுக்கும்,
முத்தங்களை எல்லாம்,
அன்பின் அடையாளமாய்,
தினம் தினம்,
மனதில் சேமிக்கிறேன்!

நீ என்னை,
கொஞ்சும் தருணத்தில்,
மொத்தமாய் தந்துவிடுகிறேன்!

ஆகையால்...
தாயாக நீயும்,
சேயாக நானும்,
கொஞ்சலின் ஆனந்தத்தை,
ஒன்றாக இரசிக்கிறோம்!
2

நன்றிகள்!


கண்ணீர் துடைக்கும் கைகளுக்கும்,
சாய்ந்து உறங்கும் தோள்களுக்கும்,
அன்போடு முத்தமிடும் இதழ்களுக்கும்,
நடை பழக்கிய விரல்களுக்கும்,
இத்தனை செய்தும்,
ஏதும் அறியாத பிள்ளையைப் போன்றே...
அமைதியாய் இருக்கும் உனக்கும்,
உன்னை தாயாய் தந்த இறைவனுக்கும்,
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளால் நன்றிகள்!
2

புண்ணியம்


நான் விளையாடும் பொழுது,
என்னுடன் நீயும் விளையாடுகிறாய்!
நான் சிரிக்கும் பொழுது,
என்னுடன் நீயும் சிரிக்கிறாய்!
நான் அழும் பொழுது மட்டும்,
என்னுடன் சேர்ந்து அழாமல்,
நீ ஏன் பதரிப்போகிறாய்?

உன்னை தாயாய் பெற்றதனால்,
புண்ணியம் கோடி கண்டேன்!
2

பட்டியல்


கரு முளைத்த கனமே,
கண்களுக்குள் ஆயிரம் கனவுகள்!
மனதிற்குள் ஓராயிரம் பெயர்கள்!
ஆண் பிள்ளைக்கும்,
பெண் பிள்ளைக்கும்,
தனித்தனியே பட்டியலிட்டு,
யோசித்துக் கொண்டிருக்கிறாய்!

பெண்ணே...
அன்பும் ஆசையும்,
கலக்கும் தருணம்,
இதுதானோ?