5

எந்நாளும் இரவாக...






நின் கூந்தலின்
வாடை நுகர்ந்தே
இரவினில் பாதி போனதடி

நின் விழியில்
இதழ் வருடி
மீதியும் பகலாய் ஆனதடி

நிலவாய் நானிருந்தால்
சூரியனை சிறையிட்டு
விடியலையும் இரவாக்கி
உன் வசப்பட்டு இருப்பேனடி
9

தீண்டல்


விழியால், சுவாசக் காற்றல்,
விரலால், உள்ள உணர்வால்
எனைத் தீண்டிப் பார்த்தாய்
பயனேதும் இல்லை யென்று
சற்று விலகியே போனாய்...
பெண்ணே நின் தீண்டலை
யான் நிலையாய் பெறவே
சிலையாய் நின்றதை யறிவாயோ?
2

மழை


வரும் வரை
நின் வரவை
எதிர் பார்த்திருப்பேன்
வந்தபின் உன்னையே
பார்த்திருப்பேன்
அடி பெண்ணே
நீயும் மழை தான்
10

அம்மா


ஆயிரம் வார்த்தைகள்
ஆழத் தேடிடினும்
அன்பெனும் வார்த்தைக்கு
அகராதி கூறும்
அருஞ்சொல் அம்மா
4

தேனாய் ஊறியதே

அமுதாய் பொழியும்
அன்பின் நினைவால்
ஐவிரலில் தாழ்ந்தவனின்
தலையின் உச்சத்தில்
கருவிற் குயிரூற்றிய
தாயின் ஞாபகமெலாம்
உணவாய் ஏற்றி
வாயதனில் இட்டேன்
இட்டதெலாம் குழைந்து
தேனாய் ஊறியதே
2

அன்பின் அரணே

விழி உறங்கிடினும்
மறவாமல் எந்தன்
கால்களில் ஒன்றும்
கைகளில் ஒன்றும்
இயங்கா நிலையில்
உனை அணைக்கும்
அன்பின் அரணே
அன்னையே தாயே

வளர்பிறை

தேய்பிறைக் காணா
மனதோடு ஊறும்
மல்லிகையும் தோல்வியைத்
தழுவும் அன்பெனும்
இவளின் புன்னகையை
விழியின் துணையோடு
வார்த்தையால் கொணர்ந்து
காட்டும் அன்னையெனும்
திங்கற் பெண்ணிவளின்
அன்பிற்கு இவ்வுலகில்
உவமை உண்டோ
3

ஆலமரம்

எலும்புகள் தேய்ந்திடினும்
உடம்பொடு தலையும்
தொங்குதற் கண்டுவிடினும்
ஆலமரம் விழுதூன்றி
நின்றாற் போல்
கோலெனும் துணையதனை
கைகளிரண்டும் தேடிடினும்
தாயே எனக்காக
நிந்தன் யாக்கை
ஒருபோதும் ஓய்வறியாது
உழைத்தமைக் காண்
4

விழிப்பாவை

பார்வையொளி படரவிடும்
கரும்பாவை நீக்கி
இருவிழிக்கொரு நிலவாய்
உனையமர்த்திப் பார்த்திருப்பேன்...

இமையே கூரையாய்
வேய்ந்து அரவணைக்க
வெண்ணிற வான்
நினைத் தாங்க
அமைதியின் பிறப்பிடமாய்
அன்பினால் அலங்கரித்து
என்றென்றும் வாழ்ந்திருப்பாய்
ஈன்றெடுத்த அன்னையே
7

பிறவிப் பயன்

எனை யுணர்நத பின்பும்
தாயவள் கயற் விழியின்
ஓரமாய் ஈரம் கண்டால்
நிந்தன் துயர் நீரேந்த
விழியோரம் விரல் சேரும்

ஏந்திய விழிநீர் யாவும்
உட்புகுந்த என் மனதோரும்
வெண்பனி படர் மலையென
குவிந்த துயர் என்றும்
குருதியில் கலந்து அரிக்கும்

இவை யெலாம் வேண்டுமோ
பிறவிப் பயனுறா மனிதா?

அருங்கடவுள் அன்னைக்கு
அன்பெனும் பூவினால்
நின் ஆயுட்காலம்
முடிவுரும் வரை
என்றென்றும் ஆற்றி
பயனுருவாய் மனிதா