9

தீண்டல்


விழியால், சுவாசக் காற்றல்,
விரலால், உள்ள உணர்வால்
எனைத் தீண்டிப் பார்த்தாய்
பயனேதும் இல்லை யென்று
சற்று விலகியே போனாய்...
பெண்ணே நின் தீண்டலை
யான் நிலையாய் பெறவே
சிலையாய் நின்றதை யறிவாயோ?
2

மழை


வரும் வரை
நின் வரவை
எதிர் பார்த்திருப்பேன்
வந்தபின் உன்னையே
பார்த்திருப்பேன்
அடி பெண்ணே
நீயும் மழை தான்
10

அம்மா


ஆயிரம் வார்த்தைகள்
ஆழத் தேடிடினும்
அன்பெனும் வார்த்தைக்கு
அகராதி கூறும்
அருஞ்சொல் அம்மா
4

தேனாய் ஊறியதே

அமுதாய் பொழியும்
அன்பின் நினைவால்
ஐவிரலில் தாழ்ந்தவனின்
தலையின் உச்சத்தில்
கருவிற் குயிரூற்றிய
தாயின் ஞாபகமெலாம்
உணவாய் ஏற்றி
வாயதனில் இட்டேன்
இட்டதெலாம் குழைந்து
தேனாய் ஊறியதே
2

அன்பின் அரணே

விழி உறங்கிடினும்
மறவாமல் எந்தன்
கால்களில் ஒன்றும்
கைகளில் ஒன்றும்
இயங்கா நிலையில்
உனை அணைக்கும்
அன்பின் அரணே
அன்னையே தாயே

வளர்பிறை

தேய்பிறைக் காணா
மனதோடு ஊறும்
மல்லிகையும் தோல்வியைத்
தழுவும் அன்பெனும்
இவளின் புன்னகையை
விழியின் துணையோடு
வார்த்தையால் கொணர்ந்து
காட்டும் அன்னையெனும்
திங்கற் பெண்ணிவளின்
அன்பிற்கு இவ்வுலகில்
உவமை உண்டோ
3

ஆலமரம்

எலும்புகள் தேய்ந்திடினும்
உடம்பொடு தலையும்
தொங்குதற் கண்டுவிடினும்
ஆலமரம் விழுதூன்றி
நின்றாற் போல்
கோலெனும் துணையதனை
கைகளிரண்டும் தேடிடினும்
தாயே எனக்காக
நிந்தன் யாக்கை
ஒருபோதும் ஓய்வறியாது
உழைத்தமைக் காண்
4

விழிப்பாவை

பார்வையொளி படரவிடும்
கரும்பாவை நீக்கி
இருவிழிக்கொரு நிலவாய்
உனையமர்த்திப் பார்த்திருப்பேன்...

இமையே கூரையாய்
வேய்ந்து அரவணைக்க
வெண்ணிற வான்
நினைத் தாங்க
அமைதியின் பிறப்பிடமாய்
அன்பினால் அலங்கரித்து
என்றென்றும் வாழ்ந்திருப்பாய்
ஈன்றெடுத்த அன்னையே
7

பிறவிப் பயன்

எனை யுணர்நத பின்பும்
தாயவள் கயற் விழியின்
ஓரமாய் ஈரம் கண்டால்
நிந்தன் துயர் நீரேந்த
விழியோரம் விரல் சேரும்

ஏந்திய விழிநீர் யாவும்
உட்புகுந்த என் மனதோரும்
வெண்பனி படர் மலையென
குவிந்த துயர் என்றும்
குருதியில் கலந்து அரிக்கும்

இவை யெலாம் வேண்டுமோ
பிறவிப் பயனுறா மனிதா?

அருங்கடவுள் அன்னைக்கு
அன்பெனும் பூவினால்
நின் ஆயுட்காலம்
முடிவுரும் வரை
என்றென்றும் ஆற்றி
பயனுருவாய் மனிதா
5

கண்ணின் மணியாகி...

ஈன்றெடுத்து எனை வளர்த்து
கண்டடைந்த சுகம் யாவும்
என்னைப் பொருத்த மட்டில்
ஏதுமில்லை என அறிவேன்

எனையே நான் உணரும்
காலம் கடக்கும் வரை
உன்னுடனே நின் விழிதனில்
மணியெனப் பொதித்துக் கொண்டாய்
உறுத்தலெனும் வலி கண்டும்
எனக்காகப் பொருத்துக் கொண்டாய்
நீயடைந்த இடர் யாவும்
சொல்லாமல் நானறிவேன்
துயர் யாவும் களைந்திடவே
பெற்ற செல்வன் பொறுப்புணர்நதேன்
இன்று முதல் சேயாகி
கண்மணியாய் நீ இருப்பாய்
2

தாயெனும் தேவதை

சிறகுகள் சுழலும்
செயற்கைக் காற்று
பஞ்சு பொதித்த
தலையனை, மெத்தை
எதுவுமிங்கு எனக்காக
தரையமர வேண்டாமே
தாயெனும் தேவதையின்
மடியெனக்காக காத்திருக்க...
2

உறக்கம் எனும் தோழன்

பெற்றவள் மடி தன்னில்
எந்தன் தலை சாய்க்க
செழித்த கருங்குழல் காட்டினுள்
விரல்கள் உலாவி வருடலால்
விழிகளுக்குத் திரை இட்டு
சொர்க ரதத்தில் செவ்வனே
அமர்ந்து சிரித்து வரும்
உறக்கம் எனும் தோழனைத்
தழுவும் சுகம் யாரறிவரோ?
2

இருவரிக் கவிதை

இருளறையில் கருவாகி
உருளையில் பிணமாகி
இருவரிக் கவிதையானாய்
மணற் கூட்டிலுயிர்
பொதிந்த மனிதா!
2

அன்பெனும் ஒளி

கருப்பு நிறத்தையும் தோற்கடிக்கும்
நிறத்தை உமிழ்ந்திருக்கும் இடமதில்
முருக்கித் திரித்த வெண்நாவுடைய
மண்ணெரித்து எண்ணெய் உண்ட
வெண்நா எரிக்கும் விளக்கே...
நீயறிந்த திசை எல்லாம்
வெளிச்சமெனும் புகழ் நீட்டி
ஒளி வரவைக் காட்டுகிறாய்
எந்தாயும் உனை காட்டில்,
வெளிச்சம் அதிகம் தருவாள்!
அவளின் அன்பெனும் ஒளியதற்கு
உன்னிடம் ஈடு உண்டோ?
2

தவத்தாய்

உமிழ்தலில் உலகங் கண்டு
நூலிறுகி முதுகுத் தண்டாய்
மாற்றம் காணுந்திங்கள் மட்டில்
பிள்ளையின் தலைதனைத் தாங்கிய
தெய்வத்தின் கரங்கள் அதனை
உடல் தகன காலத்திலும்
தீயழிக்கப எண்ண யேட்டில்
என்றென்றும் நிலைத்து இருக்கும்
நான் ஈன்றத் தவத்தாயே
3

பக்தன்

உயிர் பிரியும் மட்டில்
நிற்காது ஓட்டம் விடும்
செங்குருதி நீர் பிடித்து
நிறம் மாறா வெள்ளாடை
உடுத்திய மனக் கண்ணில்
தேக்கி வைத்த நிந்தன்
அன்பு கலந்து ஊட்டிய
வெண் நிறக் குருதியை
உண்டதனால் உயிர் வாழும்
பித்தன் இவன் என்றும்
நின் பெயரை துதியெனப்
பாடித் திரியும் பக்தன்
3

மழையெனும் தோழன்

மனதோடு வேர்விட்ட துயரம்
மரமாய் வளர்ந்து விழியோரம்
மரக்கிளை இலை யமர்ந்த
நிறமற்ற பனித் துளியாய்
கண்ணீர் வார்க்கும் தருணம்
மழையெனும் என் தோழன்
தொங்கற் நீர் தெரிப்பதற்குள்
விண் வேய்ந்த கூரையகற்றி
உப்பு நீரோடு உறவாடுவான்
3

கனவு கொழிக்கும் உறக்கம்

இரு வெண்ணிற வானில்,
காருவா நிலவு இரண்டும்,
கருத்த நூல் தொங்கற்...
இமையெனும், திரை மூடி
கனவினில், கண் விழிக்கும்!
இவையெலாம் நின் மடியில்,
விரல்களின் வருடலில் நிகழும்

ஈன்றவள் ஈட்டிய செல்வம்...
இனியதாய், கனவு கொழிக்கும்,
உறக்கம் அமைய வாழ்த்தும்!
2

வலி

நான் என்றும் ஒற்றையனாய்
கரையோரம் மணல் மிதித்து
பாதம் குழியிட்டுச் சென்று
கடக்கும் வினாடி ஒவ்வொன்றும்
பாதம் பரைத்தக் குழியதனில்
நின்னைக் காணாத வலியதனை
ஒன்றாய் சேர்த்து சுவடுகளாய்
புதைத்து விட்டுச் செல்லும்
பேதை குணம் பாராட்டும்
உயிரற்ற என் மனது
4

என் காதல்

சூரியனின் மனக் குளிர்வை
அந்தி வானெங்கும் கொண்டாடும்
மஞ்சள் நிற மங்கையின்
புன்னகையோ என் காதல்
2

அந்தி வான் அழகியே

மெலிந்த பச்சைக் கொடியின்
மெல்லின இடை வருடி
மஞ்சற் குளியல் உண்டு
மணம் தெரிக்கும் பூவே...
மகுடியூதி நினை பரித்து
ஐவிரல் குதிரைப் பூட்டிய
தலைவனவன் கை யதனில்
தேவதையாய் நினை யேற்றி
பேதையவள் முக வீதியில்
உலாவர இச்சை கொண்டாயோ?
அந்தி வான் அழகியே!
15

தொப்புள் கொடி

மெல்லிய காற்றின்
அசைவில் நின்று
நாட்டியம் காணா
முதலுறவு காட்டிய
தொப்புள் கொடிதனை
தாயிடம் தானம் பெற்று
தன் யாக்கைத் திருகி
உயிரளித்த முதல் தோழிக்கு
உன் வேதனையில் பாதியை
பிறப்பால் தானமாய் இட்டாய்
22

உயிரிசை

ஒரு வாய் கொண்டு
ஈருயிர் பகிர்ந்து உண்ணும்
ஈரைந்து மாத உறவுக்கு
ஈடு இணை இவ்வுலகில்
எவறேனும் கண்ட துண்டோ

கருத்த அறை அதனில்
தாயவள் உடல் உரிஞ்சி
செங்காந்தற் மலர் மேலே
செந்தேன் தடவியது போல்
தன் உடல் தரித்து
தானறிந்த அழுகை யெனும்
நாதம் முழுங்கி உலகிற்கு
தன் வருகையை யறிவிக்கும்
இசை நிகழ்வை யுணர்ந்து
மனமகிழும் தாய் அவளின்
உணர்வுகளை உணர்ந்த துண்டோ
2

அனாதை

இருவகை குழந்தையாம்
மலர்ந்த வாடை
சிறிதும் இழக்காது
பிறவி கண்டிருக்கும்
சிறு துளிரையும்
உயிர் துறக்கக்
காத்து கிடக்கும்
உடலுருகிய தொன்றையும்
வீதியோடு வாழவிட்ட
விழியழிந்த மூடர்கள்
இங்கே வேண்டாமே
நரகுல நாயகர்கள்
செழித்து வாழும்
வேற்றுலகம் கண்டெடுத்து
குழந்தை செல்வத்தை
துறந்து வாழும்
ஐயறிவு கொண்டு
அனாதை நாய்களாய்த்
திரியும் பேய்களைத்
துரத்துவோம் வருங்களேன்
4

தாய்

விதையாய் விழுந்த எனை
உன்னில் புதையலாய் இட்டாய்

விதையதனில் துளிர் தெரிக்க
உதிரம் உருக்கி உரமாய்
எந்தனில் உயிர் ஊற்றினாய்

திங்கள் பத்து களைய
நின் வயிற்றுத் தொட்டிலெனும்
ஊஞ்சலில் எனை இட்டாய்

பெண் எனும் போர்வைக்குள்
சேய் பின்பு தாரமாகி
என்னுடையத் தாய் ஆனாய்

உன்னை பற்றி எண்ணியே
வியப்புற்றேன் என் தாயே
2

வைரம்

மலையிரண்டில் மையத்தில்
தலையெட்டிப் பார்த்திருக்கும்
விடியற்பொழுது நாயகனின்
சிரிப்பிற்கு ஒப்புமையோ
விரலெட்டிப் பார்க்கும்
மோதிரம் அமர்ந்த
விரல் கிளையின்
மேல் மலர்ந்த
வெண்குடை விரித்து
நின் விழி நோக்கும்
வைரக் கல்
4

நாட்டியம்

சிவந்த பாதங்களின் சுவறேறி
படர்ந்து சுற்றிய சலங்கையின்
ஒலி யுதிர்க்கும் முத்துக்கள்
ஒவ்வொன்றாய் கவி பாடும்
நின் நாட்டியப் பாதங்கள்
பூமி யெனும் வீணையை
சிவந்துச் சிவந்து மீட்டுவதால்
4

வாழ்த்துக்கள்

பூ வொன்று பூத்து
பிறந்த நாள் எனும்
புது வருடம் காணுதாம்
மற்ற மொட்டுக்கள் யாவும்
இதழ் விரித்துச் சிரித்து
வாடைக் காற்றில் வீசுகையில்
மணம் இடைச் செருகி
வாழ்த் தொலிகள் கூறுதாம்

6

கவிப் பூக்கள்

எந்தன் எண்ணத்தில் பிறக்கும்
கவிப் பூக்கள் ஒவ்வொன்றும்
பொய்மையை யுறிஞ்சி புன்னகைக்கும்
என்னவளைப் புதுமையாய் போற்றும்
அழகியதாய் தன்னை மிளிர்க்கும்
நீர்த்தேக்க கார்முகில் குளிக்கையில்
வெள்ளி வட்டமாய் தோன்றிய
நிலா குமிழின் தோரணையையும்
மிஞ்சும் அதனழகையும் மிஞ்சும்
5

கனவுகள் கனவு காணும்

உன்னை நினைக்கும்
நொடியில் எல்லாம்
விழியும் மனதும்
விழித்தே இருக்கும்

நெஞ்சத்தின் ஓரம்
கனவுகள் மலரும்

உன்னை எண்ணிய
ஒவ்வொரு கனவும்
சின்னச் சின்ன
கனவுகள் காணும்
2

முகம் மலரும்

உன்னைப் பார்த்த
நாளி லெல்லாம்
சுகமான உறக்கம்
விழியோடு உருகும்

நினைவுகள் ஆசைகள்
இவை யாவும்
ஒன்றாய் சேரும்

இனிமையின் அமுதாய்
கனவுகள் மலரும்

கனவின் திரையில்
என்னவளே நிந்தன்
முகம் மலரும்
2

தவிக்க வைத்த தனிமை

விண் திரையில்
வெண்மை படர்ந்திருக்க
மூட்டங்கள் மறைத்தாலும்
எட்டிப் பார்க்கும்
நிலவிற்குத் தெரியும்
என் சோகம்

பூட்டி வைத்த
இருள் கொட்டகையில்
என்னைச் சுற்றி
பல நட்சத்திர
உறவுகள் இருந்தும்
நீயில்லா இரவு
வீணாகிப் போனதடி

நிலவைப் பார்க்கும்
ஒவ்வொரு கனமும்
நினைவுகள் யாவும்
ஒன்றாய் சேரும்
வெள்ளி நிலவிற்கு
கரு வண்ணம்
அள்ளிப் பூசும்
3

கானம்

இருளண்டிய மேகம்
தன் நுதலொடு
வெண்ணிற பொட்டுடுத்த
நிலவை ஒட்டும்
வேலை யதனில்
தன்மையனாய் மாறிய
மரம் ஈந்த
கானம் அதை
தனியனாய் உளவும்
இளங் காற்றரசன்
மெல்லியதாய் இசையுருக்கி
சலனத்தில் சுருண்டு
இடர்ப்பட்டுத் திரியும்
ஓடை நீரில்
இடைச் செருகி
இசை கரைக்கும்
3

தொடரும்...

கருங் குடை விரித்து
நிலவு தொங்கும்
ஒற்றைக் கண் மேகத்தின்
மேனி மணக்கச
வெள்ளிக் கற்கள் யாவும்
மின்னற் கீற்றாய்
விழியோரம் சிரித்து ஒளிரும்
நட்சத்திரக் கூட்டம்
பார்வையால் உள் ளிழுத்து
மனதோடு படரும்
எந்தன் கனவிலும் தொடரும்...

நாட் குறிப்பு

சூரியன் உதிர்ந்து
நிலவு குளிரும்
காலப் பொழுதில்
நினைவுகள் யாவும்
கவிதையாய் மாறி
ஆறாம் விரலாய்
கரம் தன்னில்
எழுதுகோல் பிறந்து
ஏட்டில் பதித்த
வரிகள் யாவும்
நின் முகத்தை
எந்தன் மனதோடு
வளர்பிறை யாக்கும்
0

அழகு மல்லி

குவிந்து உறங்கும் மல்லிகை
சூரிய விழியின் விடியலில்
இரவெலாம் படர்ந்த பனி
உருகுதல் கண்டு சிறகுகளாய்
தன் இதழ்கள் விரித்து
துயில் களையும் தோற்றம்
எங்கு காணினு மழகு