2

முதல் ஹைகூ

மெளனமும் அழகு தான்
உதட்டோடு அல்ல
உந்தன் விழியோடு

குடும்பம்

ஐயிரண்டுத் திங்கள்
கருக் கல்லை
சிறை வைத்து
உயிரை உளியாக்கி
உடற் சுத்தியலால்
உயிரடித்து
நீ செதுக்கி வெளியுமிழ்ந்த
பேதையொன்று...
ஒருநாள் உனக்குப்
பெயர் சூட்டும்
அம்மா என்று...

உன்
சுட்டு விரல் நீட்டியே
நீ பெற்ற
புதுப்பெயர் போல்
தலைவனவன் பெற
ஈகைக் கொண்டு
பேதைக்கு
நீ காட்டும்
புதிய முகம்
அப்பா...

ஆசை ஆசையாய்
அருகே வந்து
தன் மடியில் பேதையை
தொட்டிலிட வேண்டுமாய்
இச்சைக் கொள்ளும்
சிறு தளிர் கொழுந்து
நீ செதுக்கிய
உயிர் பெற்ற
முதற் சிற்பம்...
0

இச்சை

இருட்டறையின்
வெளிர் ஒளியில்
மறுவுயிர் பெற
உயிர் தெரித்து
உறங்கும் நேரத்தில்
என் மெளனத்தை
காற்றுடன் கலந்து
நினைவுகள் யாவும்
இசைப் பாடும்...

இரவின் மெளனத்தை
விழித்திருந்து இரசிக்க
வேண்டுமாய் இச்சை
எனக்கு...
0

உறக்கம்

கண்கள் முன் நீளத் திரையிட்டு
கருஞ் சாந்து பூசிவிட்டு
நட்சத்திரங்களை தூவியே
நிலவென்னும் பொட்டு வைத்தேன்
இரவென்னும் தேவதையை இப்படியே
தினம் தினம் நான் செதுக்கி
ஓவியத்தை இரசித்த வண்ணம்
உறக்கமெனும் ஊர் சென்றேன்
0

கண்ணா

மூங்கிலின் சிறு விரலைத்
துளையிட்டுத் திருகிய
புல்லாங்குழல்
உன் கையில் தான்
இருக்கையில் எத்தனையழகு
அதனினும் அழகு
நிந்தன் வித்தையால்
எழும் உச்சியுந்தி
துளையிட்டுச் சென்று
மெய் எலாம் திருடும்
குறுகிய துளைச் சென்று
குளிர வைக்கும் காற்றினும்
மெல்லிய வருடல் இசை...
இதனை வேறெப்படி
நான் சொல்ல
கார் கண்ணா?
0

வருகை

ஒற்றைக் கால் ஓவியத்தை
சிதிலமடையச் செய்வது போல்
ஒலி ஒன்று கேட்டதனால்
சில்லென்று சிணுங்கும்
கொலுசு மணிகள் யாவும்
தேவதை நடப்பதாய்
சொல்லாமல் சொல்லியது.

தலைவியவள் தாழகற்றி
சுவரோடு சாய்ந்தபடி
ஏக்கத்தோடு எட்டிப் பார்த்தாள்
தலைவனவன் புன்சிரிப்பின்
மலர் பூவை மாலையாக்கி
கருங்காட்டு கூந்தலுக்கு
மணற் பரைத்து
நட்டு வைத்தாள்

தலைவனவன் வருகைக்கு
கொலுசு மணிகள் யாவும்
மெளனச் சிறை சேர்ந்ததென்ன?

காதல்

கண் சிமிட்டும் நேரத்தில்
என் மனக் கருவறையில்
மணியடித்து ஒலிக்கிறதே
நீ பேசும் வார்த்தைகள்
படிமனாய் படிகிறதே
காதலெனும் சுவற்றிற்குள்
என் மனம் புதைகிறதே!
0

சர்க்கரை நிலவு

சர்க்கரைத் தூவிய
விண் கூரைக்குள்
வட்டம் வரைந்து
வெண்ணெய் தடவி
நிலவு என்றேன்

தனிமையின் இனிமை
இது தானோ?

தனிமை இனிமை

இரவு நேரத்தில் மட்டும்
விண்ணின் வைரங்களனைத்தும்
எனக்காகக் காத்திருக்கும்
என் தனிமையெனும்
கூட்டுக்குள்
உறவாடிப் போகத்தான்

சிலிர்த்தாடும் மரமும்
காற்றையும் சில நேரம்
வழி மறித்துச்
சிறை வைக்கும்

வேறென்ன நான் சொல்ல
தனிமையும் இனிமை தான்...
0

நிலவு தேவதை

இரவினிலே எனை ஈர்ப்பதெலாம்
வெண்ணிற வெள்ளி நிலவே
சூரியன் செத்துப் போகையிலே
விழிச் செதுக்கிப் பார்பதென்ன?

மரம் அறுந்த
அடர் கருங் காட்டினிலே
நீதானே இரவின்
இராட்சசியே...
உனக்குவமை சொல்
தேவதையே...
வெள்ளிச் சுடர் கொண்ட
பால் நிலவே!