வானத்து தேவதைகளாய், மேகங்கள் சூழ்ந்து, கதிர் வீசும் மலராக, பூத்து நிற்கும் நிலவினும்... இமை திறந்து ஒளிரும், நின் கருவிழிகள் என்றும், அழகு தான் பெண்ணே...
உன்னோடு பேசினேன், உன்னோடு பழகினேன், என்னோடு உன்னை வைத்து, ஓயாமல் பார்த்தேன்... நேற்று வரை, எந்தன் மனதோடும், உந்தன் நிழற்படத்தோடும்...
உன்னோடு பேச வேண்டும், உன்னோடு பழக வேண்டும், என் அருகில் உனை வைத்து, பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்... இன்று முதல், என்றென்றும் உன்னோடும், உந்தன் மனதோடும்...
இவ்வாறு எண்ணியே பல இன்று நேற்றாக மாறி காற்றோடு கவிதையாய் மறைந்தே போனதே...
ஆனால்... இந்த இன்று மட்டும், இதற்கு விதிவிலக்கு... ஏனென்றால் இக்கடிதம், உன்னிடம் வந்துவிட்டதே...
என்னை இழுத்துக் கொண்டு அந்தரத்தில் குதிக்குதடி மனது... அழகாய் குடை விரிக்கும் உன் தாமரை இதழ்களால்... ஈர்ப்பு விசையறியாது உதிர்க்கும் உன் சின்னஞ்சிறு புன்னகையால்... வண்ணமறியாது மலரும் உன் கன்னக் குழியால்...
என்னை ஈன்றவள் ஈய்ந்த உடலும் ஈன்றவள் துணையான் ஈய்ந்த உயிரும் உரு கொண்டு உள் மனதில் நினைந்து நினைந்து தேனாய் உருகி பற்பல போற்றிகள் ஈன்றோரை பாடுதாம்...
பணம் என்னும் பேயும் ஆசை என்னும் மிருகமும் மரியாதை என்னும் அரக்கனும் ஆட்கொண்ட மனித மனமே... நீ நிலைகொள்ள வேண்டாமோ?
பணப் பயனடைய... அன்பையும் அரவணைப்பையும், தாயையும் தமிழையும், வீட்டையும் நாட்டையும், பிரியா மனதோடு, அந்நிய நாட்டில், அடைகலம் புகுந்தனையே... பகட்டு வாழ்கையை, விரும்பிய மனமே... நீ நிலைகொள்ள வேண்டாமோ?
நாவோடு தேன்தமிழ் பேசும் மனிதனையும், அனைவரின் அன்பையும், இல்லாத இட்டத்தே தேடி அலையும் ஒரு நிலையும்... சென்ற இடத்தில் எடுத்த செயலை செவ்வனே செய்ய எண்ணும் மறு நிலையும்... ஏற்று தவிக்கும் மனித மனமே... நீ நிலைகொள்ள வேண்டாமோ?
நம் நாடு உன்னை அழைப்பதை கேள் தமிழா... அன்பு அரவணைப்பும் உன்னை அழைப்பதை கேள் மனிதா... தேன்தமிழ் வார்த்தைகளை செவியோடு ருசிக்க வா புதல்வா...
பசும் பிடரியுதிர்த்த பனையும் தென்னையும், தோல்கள் இழந்து நரம்புகளாய் தோன்றும் வேம்பும் மாமரமும், இளம் பச்சை ஆடையை துறந்து அசையாது நிற்கும் புற்களும் பயிர்களும், விடியலில்... வெயில் கொடுமை தாங்காது குடையேந்தும் மனித உயிர்களும், எந்தன் உயிர் தழைக்க மழையை வேண்டி காத்திருக்கும்...