0

பட்டம்

விடியலின் வேகத்தை
உன்னை நினைகையில்
உணர்கிறேன்...

பறக்கும் பட்டத்தின்
வாலைப் போலத்
துடிக்கிறேன்...

உன்னைத் தொடும்
ஆசையில் தான்
இந்த நடுநிசி இரவிலும்
எந்தன் மனதைப்
பட்டமாக்கிப் பறக்கிறேன்

சேரும் நேரம் வருவதற்குள்
சிரித்து வளர்ந்த நீயோ
இருளண்டித் தேய்கிறாய் நிலவே

நீ தேய்ந்து கொண்டே
மனமிளிரும் தங்கத்தை
உரசிப் பார்ப்பதேன் கண்ணே
3

பூக்களின் வெற்றி

பச்சை பச்சையாய்
வெடித்து நீட்டி
விரல்களாய்
முளைத்து நிற்கும்
செடியின் துணையே
கிளையே
உனைத் தழுவியே
நின் சிகரம் ஏறி
முகம் காட்டிச்
சிரிக்கும்
மலரும் தருணம் தான்
பூக்களின் வெற்றியோ
0

புல்லாங்குழல்

உயிர் பிரிந்தும்
நீ மட்டும்
உயிர் வாழ்கிறாய்
இசையாய்

வளர்ந்த பின்பு தான்
பேதையாகிறாய்
உன் பேச்சுக்களில்
நான் மயங்குவது
ஏனோ?

இசைக்கு உயிர் தரும்
மூங்கில் வார்த்த
குயிலின் இனி குரலுக்கு
இணையாய் ஓசை எழுப்பும்
புல்லாங்குழலே...
0

ஊழியன்

இளஞ்சிவப்பு மண்
புழுதிப் புகைவிட்டு
தழலெறியும் நேரம்,
நெருப்பின் தலைமகன்
தலைச் சுழி நோக்கும்காலம்...

காலணிகளுக்கு இன்று
என் நிழலொடு உறவில்லை
கால்களே நேரிடையாய்
நிழலை முத்தமிட்டுத்
தொடர்கிறது...

கருத்த மேனியனை
எந்தன் பாட்டுடைத் தலைவனை
உப்பு நீர் வார்க்கச் செய்யும்
வேந்தனவன் சூரியனே
உன்னைப் போற்றும்
பெரியவனே
இந்த கருத்த மேனியனே
பாடுபடும் ஊழியனே...
2

பிறந்தநாள்

வருடத்தின் ஒரு நாள்
நீ கடக்கும் மைல் கல்
உன் பிறந்தநாள்

வாழ்க்கையை
கடத்திவிட்டதாய் எண்ணி
இந்த ஒரு நாள் மட்டும்
இனம் புரியாத
ஒரு இன்பத்தை ஏற்கிறாய்
உனக்கு ஒன்று தெரியாது
நீ செல்லும் பாதை
உன் இறப்பை நோக்கித் தான்
என்று...
2

உன்னைப் பற்றி...

உன்னைப் பற்றி
நான் என்ன சொல்ல...

உயிரை உரித்து
உதிரத்தை உணவாய்
உறிஞ்சும்
உன் பார்வை

இது நாள் வரை
நாம் பேசாத
வார்த்தைகளெல்லாம்
சேர்த்துப் பேசும்
உன் மெளனம்

இது வரை காணாத
திரை மறைவுச்
சித்திரமாய்
என் உருவம் காட்டும்
கருவண்டாய் போன
உன் விழிகள்

நம் நினைவுகள் அனைத்தும்
ஒருங்கே உயர்த்தி
நிழற் படம் காட்டும்
உன் புருவங்கள்

நாம் இருவரும்
ஒன்றெனக் காட்டும்
என் உயிரை விதைத்து
உதித்த குளிர் நிலவு
உன் நுதற் பொட்டு

சொல்வதற்கு வார்த்தைகள்
சிக்கவில்லை
0

பீலி

கருமேகம் கண்டவுடனே
பீலியை படரவிடும்
மயில் பெண்ணே!

நீ யுதிரர்த்த ஒற்றைப் பீலி
அம்பாய் மாறி
மனதில் சொருகுதல்
முறையோ?

பெயர்

எழுதுகோளின் விழியோடு
வழியும் மையாகிப் போன
நீர்த் துளிகள்
சில நேரம் சிரிப்பது ஏன்?
புரியவில்லை...

நகைத்த நேரத்தில்
உற்றுப் பார்த்தேன்
முத்து முத்துக்களாய்
உன் பெயர்கள்...
0

நிலாப் பெண்

புவி ஈர்ப்பை
உதரிவிட்டு
நிலவீர்ப்பை
கையகப்படுத்த
நீர்க் கூட்டம்
அலைகளாய்
பொது குழு கூட்டும்
அன்பே நீ நிலவானால்!

குளிர் கொண்ட
நீர்களனைத்தும்
காணாமற் போனதே
பெண்ணே நீ என்னவானாய்!
0

முதல் முத்தம்

அந்த நிமிடம்
உணர்ச்சிகளின் உச்சம்
நரம்புகள் அனைத்தும்
இருகிப் போகும்
செங்காந்தல் மலரின்
நிறம் கொண்ட
ஓய்வில்லா செந்நீரும்
உறங்கிப் போகும்
உயிரை சில நேரம்
உடலே உமிழ்ந்துவிடும்

காரணம்?

நீ கொடுத்த
முதல் முத்தம்