2

இனிதான் இனிதாய்...


இனிதான் இனிதாய்...
இரவினில் இதழ்கள் இசைப்பதும் இனிதாய்!
இனிதான் இனிதாய்...
இமையில் இமை இமைப்பதும் இனிதாய்!

இசைந்து இசைந்து இல்லில்,
  இறையென இருந்தோம்...
இடரிலும் இன்னலிலும் இருவரும்,
  இணைந்தே இருப்போம்....

இறவா இரவினில்,
 இச்சையின் இசைவினில்...
இழக்கயேதும்,
 இல்லாது இருப்போம்...

(இனிதான் இனிதாய்)

இறுக்கிய இடையினில்,
இறுகிய இதயமும்,
இறகாய் இடருதே...

இவன் இருப்பது,
 இவள் இடையில்...
இவள் இயங்குவது,
 இவன் இசைவில்...

(இனிதான் இனிதாய்)

இருவரும் இரையாவது,
இச்சையெனும் இறையால்,
இனிதான் இனிதாய்!
இனிதான் இனிதாய்!

பேரின்பக் கள்வன்​!


நான் எனும்,
வெற்றுக் காகிதத்தில்,
அழகுக் குவியலாய்,
என்னுள் படர்ந்த
கவிதையடி... நீ!

கவிதையாய்...
நீ இருப்பதனால்...
வெற்றுக் காகிதத்தில்,
உனை உறிஞ்சும்,
கள்வனாகிப் போனேன்!

ஆம்...
நான் ஒரு...
பேரின்பக் கள்வன்​!

இன்று அழகியல் பௌர்ணமி

கருவானின் வெளிர் நிலவு,
மண்ணில் தன் பொழிவை,
படர்வித்து நெகிழ்ந்து வந்து...
தன்னை தானே,
கண்ணாடியாய் உரு மாற்றி...
உனது அழகியல் தேகத்தை,
உனக்கே காட்டி செல்வதால்...
இன்று மட்டும்,
உன்னுடைய அழகியல் பௌர்ணமி!
3

கண்ணாடியும் கரையுதே!

கண்ணாடியும் தண்ணீராய்,
கரைந்தே போகிறது...
உன்னுடைய அழகிய முகத்தை,
அதனிடத்தில் காட்டும் பொழுது...

அவ்வாறு...
கரைந்தோடிய நீரெல்லாம்,
உரைந்தே போகிறது...
உன்னுடைய அழகிய அன்பை,
என்னுடன் பகிரும் பொழுது!
3

பொய்...

உன்னை எண்ணி,
எழுதும் கவிதைகளில்...
பொய்கள் எல்லாம்,
பிழையாகிப் போனால்...
கவிதைகள் யாவும்,
மாயமாய் போகும்!

அதனால் தான்...
உன்னை பற்றிய,
அழகியல் கவிதைகளில்,
கற்பனை வண்ணங்கள்,
எப்பொழுதும் தூவுவதில்லை!
4

நீயும்... நானும்...

தினமும்...
வந்து வந்து போவதற்கும்,
பிறையாய் தேய்வதற்கும்,
நீ நிலவில்லை பெண்ணே....
என்னுடனே இருக்கும் விழி!

வருடந்தோறும்...
மழை மன்னன் சென்றதும்,
என்னை அணைக்க வருவதற்கு,
நீ மூடுபனியல்ல பெண்ணே...
எந்தன்,
உயிரை காக்கும் உடல்!

எப்போதும்...
ஓயாது கரையை அரிப்பதற்கு,
நீ அலையல்ல பெண்ணே...
என் துயரை போக்கி,
கண்ணீர் துடைக்கும் விரல்!

தனித்தனியாய் நிற்பதற்கு,
நீயும் நானும்,
வேறல்ல பெண்ணே...
நாம்,
கவிதைகள் பதிக்கப்பட்ட மடல்!
4

அதிசயம்

நிலா மண்ணை தொட்டு போவதும்,
மழைச் சாரல் மண்ணிலிருந்து பெய்வதும்,
சூரியன் நம்மை இரவில் குளிர்விப்பதும்,
கனவுகள் கண் விழித்ததும் வருவதும்,
என்றும் நடவாத அதிசயம் என்றால்...
நான் உன்னை காணாது இருப்பதும்,
அதிசயமே!

புன்னகை வங்கி


முடிவில்லா கனவொன்று காண,
விடியாத இரவுகள் தொடரும்,
நாள் ஒன்று வேண்டுமடி...

அந்த கனவு முழுதும்,
அழகாக நீ நிறைந்து,
முத்தங்கள் வழங்க வேண்டுமடி...

ஒவ்வொரு முத்தத்தின்,
சின்னஞ்சிறு இடைவெளியில்,
பூக்கின்ற புன்னகையை,
நான் பறிக்க வேண்டுமடி...

நான் பறித்த,
உனது புன்னகையை,
எனது விழிகளிலே,
சேமிக்க தோணுதடி!
0

என்றென்றும் மழைக் காலம்!


மனதிற்குள்...
ஆயிரம் ஆயிரம்,
உணர்வுக் கூட்டங்களால்...
என்றும் ஓயாது,
ஈரத்துடன் தெரிக்கப்படும்,
அன்புத் துளிகளும்...
மழை தான்!

ஆகையால்...
என் மனக் கூண்டில்,
என்றென்றும் மழைக் காலம்!
0

இவளும் ஒரு தேவதை...


இவள்...
கண்களுக்கு புலப்படாது,
விண்ணுலகில் திரியும்,
மாயமாய் மறையும்,
தேவதை இல்லை...

என் மனதிற்குள்,
என்றும் திரியும்,
அன்பை மட்டுமே,
என்னுடன் பகிரும்,
அம்மா என்னும்,
அழகிய தேவதை!