0

அரங்கேற்றம்



ஆழிக்கரை பருமணலின்,

உட்புகும் அலை நீரே...

அங்கேயே சில நேரம்,

நகராது வாசம் செய்தால்...

என்னவளின்...

பாதச் சுவடுகளின்,

அழகியல் அரங்கேற்றம்,

அங்கேயே நிலைபெறும்!

0

மை விழிப் பாதை


வாகனங்கள் கடக்கும் பாதையல்ல...
நின் விழியுந்துதலால்...
எப்பொழுதும் என் உதடுகளும்,
அவ்வப்பொழுது என் விரல்களும்,
கவித்துவத்தோடு கடக்கும்...
அவள் விழியதனில்,
கார் வண்ணம் திளைத்தோடும்,
மை விழிப் பாதை!

0

ஆடை



இடையினில் முளைத்து,

மேலும் கீழுமாய் அலையாடி...

அங்கங்களின் மேல்,

அழகாய் ஆனந்தமாய் இழையோடும்...

ஆடை என்னும்,

நூலிழைக் கயவர்களுடன் தான்,

நித்தமும் என் போர்!

0

அழகியலின் விதி மீறல்


வர்ணனை கொடுக்க...
நிலவை அழைத்தேன்,
    நீரை அழைத்தேன்...
மானை அழைத்தேன்,
    மீனை அழைத்தேன்…
தேனை அழைத்தேன்,
    தேவதைகளை அழைத்தேன்…

அவள்…
எந்த உவமைக்குள்ளும்,
அடங்கவில்லை!

அவளை…
எவற்றிற்கும் ஒப்புமையாக்க,
என் மனம் ஒப்பவில்லை!

ஏனெனில்,
அவள் அழகியலின்,
விதி மீறல்!


0

பொய்மையும் வாய்மையிடத்து

 


பிழை நீங்கி,

 பிறந்திருந்தால்…

பிறர் தயை நாடாது,

 பிழைத்திருப்பேன்…

என்ற…

பிதற்றல்கள் யாவும்…

 பொய்மையே!

0

மாய வினை!


யான் யாக்கை யாதென்று,
யான் கூறாது,
யாவரும் அறிந்திருக்க,
யான் செய்வது,
யாதென்று இயம்புவாய்!

யான் என்று ஏதுமில்லை…
யாக்கை என்பது பொய்மை நிலை…
யார் யாது செய்வதென்பதை,
யாரும் அறியாதிருப்பதே,
யாவருக்கும் அவன் விதித்த,
மாய வினை!

0

கதைப்போமா

 




காதுகள் அறியும்,

 மொழியன்றி...

கண்களும் அறியும்,

 மொழியதனில்...

கைகளே கவிபாடும்,

 கவித்துவத்தை...

கதைப்போமா...

 கதைப்போமா...

0

கண்ணீரே...

 


இன்னல்களின் இனிமையும் நீ,

இன்பத்தில் இழிப்பதுவும் நீ,

இமைகளின் இயற்றலும் நீ,

இமைகள் இழப்பதுவும் நீ,

இவன் இதுவென இயம்புவதும் நீயே...

கவிதையாய் கரையும் கண்ணீரே!

0

நான் பிழை...


 ஆண்:

நான் பிழை...

உன் மெய் எனும்,

உண்மையில் சிறு பிழை...


நீ மழலை...

என் மீது விரலால்,

தவழும் மழலை...


பெண்:

வார்த்தை மழையினில்,

எனை நனைத்தது போதும்...

இவை என் விழியினில்,

முத்தங்கள் பதித்து,

வரைந்த கவிதைகள் போலும்...


ஆண்:

அழகியே...

நீயே என் கவிதை...

வார்த்தைகள் அதற்கு தேவையில்லை...

நான் உதிர்பதெல்லாம்,

உன்னிடமிருந்து பறித்த மிச்சங்களை...


பெண்:

என்னை மொத்தமாய்,

களவு கொண்ட கள்வா...

மீதமிருக்கும் அனைத்து அன்பையும்,

களவு கொள்ள வருவாய்...


ஆண்:

நான் பிழை...

உன் மெய் எனும்,

உண்மையில் சிறு பிழை...


நீ மழலை...

என் மீது விரலால்,

தவழும் மழலை...

2

இனிதான் இனிதாய்...


இனிதான் இனிதாய்...
இரவினில் இதழ்கள் இசைப்பதும் இனிதாய்!
இனிதான் இனிதாய்...
இமையில் இமை இமைப்பதும் இனிதாய்!

இசைந்து இசைந்து இல்லில்,
  இறையென இருந்தோம்...
இடரிலும் இன்னலிலும் இருவரும்,
  இணைந்தே இருப்போம்....

இறவா இரவினில்,
 இச்சையின் இசைவினில்...
இழக்கயேதும்,
 இல்லாது இருப்போம்...

(இனிதான் இனிதாய்)

இறுக்கிய இடையினில்,
இறுகிய இதயமும்,
இறகாய் இடருதே...

இவன் இருப்பது,
 இவள் இடையில்...
இவள் இயங்குவது,
 இவன் இசைவில்...

(இனிதான் இனிதாய்)

இருவரும் இரையாவது,
இச்சையெனும் இறையால்,
இனிதான் இனிதாய்!
இனிதான் இனிதாய்!